Tamilசெய்திகள்

உக்ரைன் போர் – ரஷ்ய படையில் பணியாற்றிய மேலும் 2 இந்தியர்கள் பலி

ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 2 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் ரஷிய ராணுவத்தில் சேர்க்கப்படுகின்றனர்.

இந்தியாவைச் சேர்ந்த பல இளைஞர்களும் ரஷிய ராணுவத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வருகின்றனர். ரஷியாவில் அதிக சம்பளத்துக்கு வேலை வாங்கி தருவதாகக் கூறி ஏஜெண்டுகள் இந்திய இளைஞர்களை அங்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஆனால்வேலை வாங்கி தராமல் உக்ரைனுடன் சண்டையிட, ரஷிய ராணுவத்தில் இந்தியர்கள் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டு உள்ளனர் என்று புகார் எழுந்தது. இதற்கிடையே சில மாதங்களுக்கு முன்பு உக்ரைன் போரில் பங்கேற்ற இந்தியர்கள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து ரஷியாவில் பணியாற்றும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.

இந்த நிலையில் உக்ரைன் போரில் மேலும் 2 இந்தியர்கள் பலியாகி உள்ளனர். ரஷிய ராணுவத்தில் பணியாற்றிய பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசை சேர்ந்த தேஜ்பால் சிங் (வயது 30) உள்பட 2 இந்திய வாலிபர்கள் போர் களத்தில் இறந்துள்ளனர்.

இதுகுறித்து தேஜ்பால் சிங் மனைவி பர்மிந்தர் கவுர் கூறும்போது, எனது கணவர் ஜனவரி 12-ந்தேதி சுற்றுலா விசாவில் ரஷியா சென்றார். தனது பயணத்தின் மூன்று நாட்களுக்குள் ரஷிய ராணுவத்தில் சேர முடிவு செய்தார். இதற்கான பயிற்சிகளை மேற் கொண்டார் என்றார். தேஜ்பால் தனது ஆயுதப் பயிற்சியை தொடங்கியதும், அதன் புகைப்படங்களை அடிக்கடி மனைவியுடன் பகிர்ந்து கொண்டார்.

கடந்த மார்ச் 3-ந்தேதி கடைசியாக மனைவியுடன் பேசியுள்ளார். அப்போது தென்-மத்திய உக்ரைனில் உள்ள டோக்மாக் நகருக்கு அவர் அனுப்பப்பட்டது குறித்து மனைவியிடம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தேஜ்பால் சிங் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தேஜ்பாலின் உடலை சொந்த நாட்டுக்கு கொண்டு வர உதவுமாறு அவரது குடும்பத்தினர் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறும்போது, “ரஷியாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் நடந்து வரும் மோதலில் ரஷிய ராணுவத்தால் சேர்க்கப்பட்ட 2 இந்தியர்கள் சமீபத்தில் கொல்லப்பட்டனர். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம், பாதுகாப்பு அமைச்சகம் ரஷிய அதிகாரிகளிடம், இந்தியர்களின் உடல்களை அனுப்புமாறு வலியுறுத்தியுள்ளது. இந்தியர்களை ரஷிய ராணுவத்தில் சேர்ப்பது இருதரப்பு உறவுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே ரஷிய ராணுவத்தில் இந்தியர்களை சேர்ப்பதை நிறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இந்தியாவின் கோரிக்கையை விரைவில் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக, ரஷியா தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.