X

உக்ரைன் பதுங்கு குழிகளில் உணவின்றி தவிக்கும் இந்திய மாணவர்கள் – வாட்ஸ் அப் வீடியோவால் பரபரப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஜீவா நகரை சேர்ந்தவர் அஸ்வந்த். இவரது நண்பர்கள் சசி (சென்னை), சந்த்ருஆனந்த் (காரைக்கால்). இவர்கள் உக்ரைனில் கார்கிவ் நகரில் மருத்துவம் 5-ம் ஆண்டு படித்து வருகிறார்கள்.

தற்போது ரஷியா-உக்ரைன் இடையே போர் உக்கிரம் அடைந்துள்ள நிலையில் அவர்கள் தாங்கள் தங்கியுள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் உள்ள பதுங்கு குழியில் இருந்து செல்போனில் பேசி அதை வாட்ஸ்-அப்பில் பெற்றோர்களுக்கு அனுப்பியுள்ளனர்.

உக்ரைனில் நாங்கள் தங்கியுள்ள கார்கிவ் பெரிய நகரமாகும். இந்த நகரம் ரஷ்யா எல்லைப்பகுதியில் இருந்து 40 கி.மீ. தூரத்தில் உள்ளது. கார்கிவ் நகரத்தில் மட்டும் 5 ஆயிரம் இந்தியர்கள் உள்ளனர். குண்டு சத்தம் இந்த பகுதியில் கேட்டபடி உள்ளது. கடையில் தண்ணீர், ரொட்டி, சிப்ஸ் ஆகியவைதான் கிடைத்தது. வேறு எந்தவித உணவுகளும் கிடைக்கவில்லை. ஏ.டி.எம்.செயல்படவில்லை. கடைகள் திறக்கவில்லை. இங்கிருந்து இந்தியா திரும்புவதற்கு போலந்து அல்லது ஹங்கேரி ஆகிய நாடுகளுக்கு சென்று அங்கிருந்துதான் வரவேண்டும். நாங்கள் இருக்கும் இடத்திற்கும் அந்த நாடுகளுக்கும் 1,400 கி.மீ.தூரம் இருக்கும். பயணநேரம் ஒருநாள் ஆகும். அத்துடன் அங்கு செல்ல போக்குவரத்து வசதியும் இல்லை. அதனால் அங்கு எப்படி செல்வது என்று தெரியவில்லை.

இங்கு சிக்கி தவிப்பவர்களை மீட்ககோரி மத்திய, மாநில அரசுகளுக்கு விண்ணப்பம் அளித்துள்ளோம். இங்கு சிக்கியுள்ளவர்களை அரசு தான் பத்திரமாக மீட்டு அழைத்து செல்ல வேண்டும். மேற்கண்டவாறு அந்த மாணவர்கள் பேசியுள்ளனர்.

மாணவர் அஸ்வந்தின் தந்தை ஜெயக்குமார் கூறும் போது, போர் அறிகுறிகள் தெரிந்ததும் அஸ்வந்த் ஊர் திரும்புவதற்காக விமான டிக்கெட் எடுக்கச் சென்றுள்ளார். 25-ந்தேதி அதிகாலை 2 மணிக்கு உக்ரைன் தலைநகர் கிவ் நகரில் இருந்து சென்னை புறப்படும் விமானத்திற்குதான் டிக்கெட் கிடைத்துள்ளது. கார்கிவ் நகரில் இருந்து கிவ் நகரம் 500 கி.மீ.தூரம் உள்ளது. ஊர் திரும்புவதற்கு புறப்பட தயாராக இருந்த நிலையில் 24-ந்தேதி காலை ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்தது. அதனால் அஸ்வந்த் ஊர் திரும்பமுடியாமல் கார்கிவ் நகரில் உள்ளார்.

கார்கிவ் நகரில் இருந்து ருமேனியா 800 கி.மீ. தூரத்தில் உள்ளது. கார்கிவ் நகரில் இருந்து ருமேனியா செல்வதற்கு போக்குவரத்து வசதி இல்லை. அதனால் கார்கிவ் நகரில் இருந்து, அங்குள்ளவர்களை மீட்டு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவேண்டும் என்று தூதரகத்தையும், முதல்-அமைச்சரையும் கேட்டுக்கொண்டுள்ளோம் என்றார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி. பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மகன் சஞ்சீவி (வயது 22). இவர் உக்ரைன் நாட்டில் மெக்காலே நகரில் பிளாக்சி மருத்துவ கல்லூரியில் 4 -வது ஆண்டு படித்து வருகிறார். சஞ்சீவ் தான் தங்கி இருக்கும் பகுதியில் ரஷிய ராணுவம் குண்டு வீசி நடத்திவரும் தாக்குதல் சம்பவங்களை படம்பிடித்து தனதுதந்தையின் செல்போனிற்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும் வாட்ஸ்அப் ஆடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரியிலேயே விளக்குகளை அணைத்து வைத்துக் கொண்டு இருப்பதாக கூறியுள்ளார்.

அது மட்டுமல்ல உணவுக்கு வழியின்றி ராணுவத்தின் எச்சரிக்கை ஒலி மற்றும் போர் விமானங்களின் சத்தம் கேட்டால் பதுங்கு குழிகளுக்குள் ஒளிந்து கொண்டு இருப்பதாகவும், எனவே இந்திய அரசும், தமிழக அரசும், உயிருடன் பத்திரமாக மீட்டு தாய் நாட்டிற்கு அழைத்து செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதனிடையே உக்ரைனில் இருந்து திரும்பிய திருப்பூர் மாவட்டம் காங்கயத்தை சேர்ந்த மருத்துவ மாணவர் ஹர்‌ஷவர்தன் கூறுகையில், உக்ரைனில் நடக்கும் போரால் பல மாணவர்கள் பதுங்கு குழிகளில் அச்சத்துடன் பதுங்கி உள்ளனர். பலருக்கு உணவு, குடிநீர் கூட கிடைக்காத நிலையில் உள்ளனர். மேலும் அத்தியாவசியமான செல்போன், இணைய தள சேவைகள் உள்ளிட்டவை இல்லாததால் பல மாணவர்களை அவரது பெற்றோர்கள் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் தவித்து வருகின்றனர். தமிழக முதல்வரும், பிரதமரும் எஞ்சியுள்ளவர்களை விரைவில் மீட்க வேண்டும். எங்களது மருத்துவ படிப் பிற்கு அரசுகள் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்றார்.