ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான உக்ரைன் நாட்டின் அதிபராக, 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 7-ந் தேதி முதல் பதவியில் இருப்பவர், பெட்ரோ போரோஷெங்கோ. இவரது பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், மார்ச் 31-ந் தேதி நடத்தப்பட்டது.
இந்த தேர்தலில் மொத்தம் 39 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். பெட்ரோ போரோஷெங்கோ, மீண்டும் அதிபர் ஆவதற்கு போட்டியிட்டார். அவரை எதிர்த்து 38 பேர் போட்டியிட்டாலும் உண்மையான போட்டி அவருக்கும், அந்த நாட்டின் நகைச்சுவை நடிகரான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (வயது 41) என்பவருக்கும், முன்னாள் பிரதமர் யூலியா டிமோஷெங்கோவுக்கும் இடையேதான் நிலவியது. இந்த தேர்தலில் ஜெலன்ஸ்கி முன்னிலையில் இருந்தார். எனினும் எந்த வேட்பாளரும் 50 சதவீதத்துக்கு அதிகமான வாக்குகளைப் பெறவில்லை.
உக்ரைன் அரசியலமைப்பு சட்டத்தின்படி, தேர்தலில் பதிவான ஓட்டுகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமான ஓட்டுகளைப் பெறுகிறவர்தான் வெற்றி பெற முடியும். ஒரு வேளை அப்படி யாரும் பெறாவிட்டால் இரண்டாவது சுற்று தேர்தல் நடத்தப்படும். முதல் சுற்று தேர்தலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள்.
அதன்படி, நேற்று இரண்டாம் சுற்று தேர்தல் நடைபெற்றது. இதில், பெட்ரோ போரோஷெங்கோ, வோலோடிமிர் ஜெலன்ஸ்கி போட்டியிட்டனர். வாக்குப்பதிவு முடிவடைந்ததும் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பும் ஜெலன்ஸ்கிக்கு சாதகமாகவே இருந்தது. அதன்படி, வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே, ஜெலன்ஸ்கி முன்னிலை வகித்தார்.
70.33 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், அதில் 73 சதவீத வாக்குகளை ஜெலன்ஸ்கி பெற்று பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். தற்போதைய அதிபர் பெட்ரோ போரேலாஷெங்கோ 24.66 சதவீத வாக்குகளே பெற்றிருந்தார். எனவே, ஜெலன்ஸ்கியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. மீதமுள்ள வாக்குகள் எண்ணி முடிந்ததும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடும்.
ஆனால், நேற்று இரவில் இருந்தே ஜெலன்ஸ்கி மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தனது ஆதரவாளர்களிடையே பேசிய ஜெலன்ஸ்கி, தனக்கு ஆதரவு அளித்து வெற்றி பெறச் செய்த மக்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டேன் என கூறினார்.