X

உக்ரைனுக்கு எதிரான போர் தொடரும்! – ரஷ்ய அதிபர் புதின் திட்டவட்டம்

உக்ரைன் நாட்டுக்கு சொந்தமான கிரிமியா பகுதியை கடந்த 2014-ல் ரஷியா தன்னுடன் இணைத்ததில் இருந்து இரு நாடுகளுக்குமிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 3 கடற்படை கப்பல்களை சமீபத்தில் கிரிமியா அருகே ரஷிய ராணுவம் தாக்குதல் நடத்தி கைப்பற்றியதில் இருந்து இருநாடுகளுக்கு இடையே மீண்டும் போர் பதற்றம் உருவாகி உள்ளது.

இந்த பனிப்போரை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் ரஷியாவை சேர்ந்த 16-60 வயதுக்குட்பட்ட ஆண்கள் தங்கள் நாட்டுக்குள் நுழைய உக்ரைன் அரசு சமீபத்தில் தடை விதித்துள்ளது. உக்ரைனின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பதிலடியாக இதேபோன்ற தடையை விதிக்கும் எண்ணம் ஏதுமில்லை என ரஷியா தெரிவித்தது.

இந்நிலையில், உக்ரைன் நாட்டின் பிரச்சனையை தீர்ப்பத்தில் அக்கறை காட்டாத ஆட்சியாளர்கள் பதவியில் இருக்கும்வரை போர் தொடரும் என ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தற்போது திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

அர்ஜென்டினா தலைநகர் பியுனஸ் அய்ரெஸ் நகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த புதின், ‘ரஷியா-உக்ரைன் இடையில் நீண்டுவரும் பிரச்சனைக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பதில் அந்நாட்டின் தலைமை பொறுப்பில் உள்ளவர்களுக்கு அக்கறை இல்லை. எனவே, தற்போதுள்ள ஆட்சியாளர்கள் பதவியில் இருக்கும்வரை இருநாடுகளுக்கும் இடையிலான போர் தொடரும்’ என்று தெரிவித்தார்.