உக்ரைனில் புச்சா நகரில் பொதுமக்கள் படுகொலை – ஐ.நா சபையில் இந்தியா கண்டனம்

உக்ரைன் மீதான ரஷிய படைகளின் தாக்குதல் ஒரு மாதத்தை தாண்டியும் நீடித்து வருகின்றது. இந்நிலையில் உக்ரைனின் புச்சா நகரைம் முழுவதும் சடலங்கள் சிதறிக் கிடந்ததாக அந்நகர மேயர் தகவல் தெரிவித்திருந்தார்.

குப்பை கொட்டும் தொட்டிகளில் பொதுமக்களில் 20 பேரின் உடல்கள் போடப்பட்டிருந்தது குறித்து வெளியான புகைப்படங்கள் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

புச்சா நகரில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இது குறித்து ஐ.நா.பாதுகாப்பு சபை கூட்டத்தில் இந்திய சார்பில் உரை நிகழ்த்திய நிரந்தர பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி தெரிவித்திருப்பதாவது:

உக்ரைனில் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்துள்ளது, அங்கு மனிதாபிமான நிலைகளும் மோசமடைந்துள்ளன.

புச்சா நகரில் பொதுமக்கள் படுகொலைகள் பற்றிய சமீபத்திய அறிக்கைகள் ஆழ்ந்த கவலையளிக்கின்றன. இந்த கொலைகளை நாங்கள்(இந்தியா) சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறோம். சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் ஆதரிக்கிறோம்.

இந்தியா உக்ரைனுக்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் மருந்துகள் மற்றும் அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை அனுப்புகிறது. வரவிருக்கும் நாட்களில் உக்ரைனுக்கு இன்னும் அதிகமான மருத்துவப் பொருட்களை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

மனிதாபிமான நடவடிக்கை, நடுநிலைமை, பாரபட்சமற்ற தன்மை உள்ளிட்ட நடவடிக்கைகள் ஒருபோதும் அரசியலாக்கப்படக்கூடாது. சர்வதேச சமூகமும் தொடர்ந்து மனிதாபிமான தேவைகளுக்கு சாதகமாக பதிலளிக்கும் என்று நம்புகிறோம்.

மனிதாபிமானமான முறையில் அத்தியாவசிய பொருட்களை வழங்கப்படுவதற்கு, பாதுகாப்பான பாதை அமைக்கும் உத்தரவாதங்களை வலியுறுத்தும் கோரிகைக்களை நாங்கள் ஆதரிக்கிறோம்.

இரு நாடுகளும் பிரச்சினைக்கு தூதரக ரீதியில் தீர்வு மற்றும் பேச்சுவார்த்தை நடத்தும் பாதையைத் தொடர வேண்டியதன் அவசியத்தை தொடக்கத்தில் இருந்தே இந்தியா வலியுறுத்தி வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools