Tamilசெய்திகள்

உக்ரைனில் துப்பாக்கி சூட்டிற்கு பலியான கர்நாடக மாணவரின் உடலை இந்தியா கொண்டு வருவது குறித்து பா.ஜ.க எம்.எல்.ஏ சர்ச்சை கருத்து

உக்ரைனின் கார்கிவ் நகரில் ரஷியா படைகள் கடந்த ஒன்றாம் தேதி நடத்திய தாக்குதலில் கர்நாடக மாநிலம் ஹாவேரியைச் சேர்ந்த நவீன் என்ற மருத்துவ படிப்பு மாணவர் உயிரிழந்தார். அவரது உடல் இன்னும் சொந்த ஊரான ஹாவேரிக்கு கொண்டு வரப்படவில்லை.

இது தொடர்பாக பேசிய நவீனின் தந்தை சேகரப்பா இரண்டு நாட்களுக்குள் தமது மகன் உடல் வீட்டிற்கு கொண்டு வரப்படும் என்று அரசு உறுதியளித்து இருந்ததாக கூறினார். தனது மகனின் உடலை வீட்டிற்கு கொண்டு வர உதவுமாறு பிரதமர் மோடி மற்றும் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஆகிய இருவரையும் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் நவீன் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவது குறித்து கர்நாடக பாஜக எம்எல்ஏ அரவிந்த் பெல்லாட், சர்ச்சைக்குரிய முறையில் கருத்து தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் இது குறித்து அவர் பேசியுள்ளதாவது:

நவீனின் சடலத்தை மீட்க அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. உக்ரைன் ஒரு போர்க்களம் மற்றும் அனைவருக்கும் தெரியும். உயிருடன் இருப்பவர்களை மீட்டெடுப்பது மிகவும் சவாலானது.இறந்தவர்களை மீட்டெடுப்பது இன்னும் கடினமாகி விட்டது,

இறந்தவர் உடலை விமானத்தில் எடுத்த வர அதிக இடம் தேவைப்படும்.அதற்கு பதிலாக எட்டு முதல் 10 பேர் வரை அந்த விமானத்தில் பயணம் மேற் கொள்ளலாம்.என்றாலும் முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன, முடிந்தால் உடல் கொண்டு வரப்படும். நவீனின் உடலைக் கொண்டு வர பிரதமர் மோடி அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.