Tamilசெய்திகள்

உக்ரைனில் இருந்து 30 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம்

 

ரஷியா நடத்தி வரும் போர் காரணமாக உக்ரைனில் இருந்து 30 லட்சத்து 20 ஆயிரம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளதாக ஐ.நாவுக்கான புலம் பெயர்வோர் நிறுவனம்
தெரிவித்துள்ளது.

மேலும் 6.5 மில்லியன் மக்கள் உக்ரைனுக்குள் போர் நடைபெறும் பகுதிகளில் இருந்து பிற பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளதாக அந்த நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.

12 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் போரால் பாதிக்கப்பட்ட உக்ரைன் நகரங்களில் சிக்கித் தவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அபாயம், பாலங்கள் மற்றும் சாலைகள் தகர்ப்பு, தங்குமிடங்களை தேடுவது குறித்த தகவல் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் அவர்கள் வெளியேற முடியாமல் இருப்பதாகவும்
ஐ.நாவுக்கான புலம் பெயர்வோர் நிறுவனம் கூறியுள்ளது.

இங்நிலையில், ரஷிய படையெடுப்பிற்குப் பிறகு உக்ரைன் நகரங்களில் கிடக்கும் கண்ணிவெடிகள் மற்றும் வெடிக்காத வெடிகுண்டுகளை செயல் இழக்க செய்ய பல ஆண்டு காலம் ஆகும் என்று
அந்நாட்டு உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி தெரிவித்துள்ளார்.

கட்டிடங்களின் இடிபாடுகளுக்கு அடியில் கிடக்கும் வெடிக்காத வெடிகுண்டுகள் மக்களுக்கு உண்மையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன என்றும், கண்ணிவெடியை அகற்றும் நிபுணர்களின்
குழுக்களை தயார் செய்யுமாறு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நட்பு நாடுகளை கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

போர் முடிந்தவுடன் உக்ரைனில் பராமரிப்பு பணியை மேற்கொள்ள மேற்கத்திய நாடுகளின் உதவி தேவைப்படும் என்றும் மொனாஸ்டிர்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.