Tamilசெய்திகள்

உக்ரைனில் இருந்து இந்தியா செல்ல விமான கட்டணம் 3 மடங்கு உயர்வு!

நேட்டோ படையில் உக்ரைன் சேருவதற்கு ரஷியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில் உக்ரைன் எல்லையில் ரஷியா திடீரென படைகளை குவித்தது. இதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்ததோடு, ரஷியா, உக்ரைனை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்தது.

இதனால் உக்ரைன் -ரஷியா எல்லையில் தொடர்ந்து போர் பதட்டம் நீடித்து வருகிறது.

இந்த பதட்டமான சூழ்நிலையில் உக்ரைனில் உள்ள இந்தியர்களை பாதுகாக்கவும், அவர்களை பத்திரமாக மீட்டு வரவும் மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

மேலும் உக்ரைனில் உயர்கல்வி பயில சென்ற இந்திய மாணவர்களை அங்கிருந்து சொந்த நாட்டுக்கு அழைத்து வர கூடுதல் விமானங்களை இயக்கவும் ஏற்பாடு செய்து வருகிறது.

இந்தியாவின் கேரளா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் உக்ரைனில் தங்கி மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளை படித்து வருகிறார்கள்.

இவர்களில் பெரும்பாலானோர் இப்போது இந்தியா திரும்ப ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஆனால் இந்தியா திரும்புவதற்கான விமான கட்டணம் தற்போது அதிகரித்து இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.

அதாவது ரூ.25 ஆயிரம் முதல் 30 ஆயிரமாக இருந்த விமான கட்டணம் தற்போது ரூ.70 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரமாக அதிகரித்து இருப்பதாக அங்குள்ள மாணவர்கள் கூறியுள்ளனர். இது வழக்கமான கட்டணத்தை விட 3 மடங்கு அதிகம் என கூறப்படுகிறது.

இதுபற்றி மத்திய மந்திரி முரளீதரன் கூறியதாவது:-

உக்ரைனில் தங்கி உள்ள இந்தியர்களை அழைத்து வர ஏற்பாடு செய்து வருகிறோம். இது தொடர்பாக விமான நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது, என்றார்.