உக்ரைனின் ட்ரோன் தாக்குதலை முறியடித்தது ரஷ்யா

ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்து 1½ ஆண்டுகளை கடந்துவிட்டது. ரஷ்யாவின் தொடர் தாக்குதல்களால் உக்ரைனின் பல நகரங்கள் உருகுலைந்து விட்டன. இந்த நிலையில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

உக்ரைன் அரசு கிரீமிய தீபகற்ப பகுதிகள் அருகே 7 ஆளில்லா டிரோன்கள் மற்றும் நீருக்கடியில் 2 ஆளில்லா விமானங்களை கொண்டு தாக்குதல் நடத்த முயற்சித்தது. ஆனால் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. இந்த தாக்குதல் முயற்சியில் உயிரிழப்போ அல்லது பாதிப்புகளோ எதுவும் ஏற்படவில்லை. 2 ஆளில்லா விமானங்களும் கருங்கடல் பகுதி அருகே சுட்டு வீழ்த்தப்பட்டு உள்ளது. மற்ற டிரோன்கள் போர் படைகளை கொண்டு வீழ்த்தப்பட்டது என்று தெரிவித்து உள்ளது.

ஆனால் இதற்கு உக்ரைன் தரப்பில் இருந்து எந்த விதமான பதிலும் வெளியாகவில்லை. கிரீமியா தீபகற்பத்தில் இருந்து ரஷ்யாவுக்கு வர இணைப்பு மேம்பாலம் உள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தால் அந்த மேம்பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது.

பாதுகாப்பு முன் எச்சரிக்கையாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அப்பகுதியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப் பட்டுள்ளது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர தீவிர முயற்சிகளை எடுத்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்த பாலம் ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் குண்டு வெடிப்பில் சேதமடைந்தது. இதற்கு உக்ரைன் தான் காரணம் என்று ரஷ்யா குற்றம் சாட்டியது. ஆனால் அதையும் உக்ரைன் அரசு மறுத்தது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news