Tamilசெய்திகள்

ஈ.பி.எஸ் – ஓ.பி.எஸ் ஒன்றாக இருந்தால் தான் அதிமுகவுக்கு நல்லது – நயினார் நாகேந்திரன் பேட்டி

நெல்லை தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் இன்று ராமையன்பட்டியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க.வில் சண்டை ஏற்படுவதால் தான் நான் வெளியேறினேன். அ.தி.மு.க.வினர் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். உள்கட்சி விவகாரத்தில் பா.ஜனதா தலையிட முடியாது. இதுகுறித்து அகில இந்திய தலைமை முடிவு செய்யும். அதே நேரத்தில் இதற்கு முன்பு இது போன்ற குளறுபடிகள் நடந்துள்ளது. ஆகவே ஒன்றாக சேர மாட்டார்கள் என்று கூற முடியாது.

இந்த விவகாரத்தில் பா.ஜனதா நடுநிலைமையாகவே இருக்கும். அ.தி.மு.க. அலுவலகம் அருகே சட்டம், ஒழுங்கு பிரச்சினைகள் நடக்காமல் தி.மு.க. பார்த்திருக்க வேண்டும். அ.தி.மு.க. அலுவலகத்துக்கு சீல் வைக்கும் அளவுக்கு தி.மு.க. சென்றிருக்க கூடாது. தி.மு.க.வுக்கு எதிர்க்கட்சியாக பா.ஜனதா உள்ளது.

நான் பா.ஜ.க.வில் சேரும் பொழுது அ.தி.மு.க.வில் உள்ளவர்களை என்னோடு யாரையும் அழைக்கவில்லை. அப்படி அழைப்பு விடுத்திருந்தால் அநேகம் பேர் வந்திருப்பார்கள். அ.தி.மு.க.வின் வாழ்வுக்கு ஓ.பி.எஸ். இ.பி.எஸ். இணைந்த கைகளாக இருந்தால் நன்றாக இருக்கும்.

பட்டமளிப்பு விழா பா.ஜனதாவின் பிரச்சார மேடை என்பது கூறுவது தவறு. பட்டமளிப்பு விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் கலந்து கொள்ள வேண்டியது அவரது கடமை. தி.மு.க. அரசு கல்குவாரி திறப்பது தொடர்பாக ஆலோசனைகள் நடத்தி வருகிறது என கலெக்டர் தெரிவித்துள்ளார். வெகுவிரைவில் அதற்கு முடிவு எட்டப்பட வேண்டும்.

குவாரிகள் விரைவில் திறக்கப்பட வேண்டும். தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்க வேண்டும். தி.மு.க. அரசு உடனே நடவடிக்கை எடுத்து கல்குவாரிகளை திறந்து வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். கட்டுமான பொருட்கள் விலை ஏற்றத்தை தடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.