ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் – 77 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல் அதிகாரி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா மரணம் அடைந்ததை தொடர்ந்து இத்தொகுதிக்கு வருகிற 27-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாகல் கடந்த 31-ந்தேதி தொடங்கி 7-ந்தேதி வரை நடந்தது.

இதில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், தே.மு.தி.க. சார்பில் சிவபிரசாந்த் உள்பட 96 பேர் 121 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

இதையடுத்து வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் கட்சி, அமமுக, தேமுதிக உள்ளிட்ட 83 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. இதில் ஓ.பி.எஸ். அணி வேட்பாளர் உள்பட 38 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில் வேட்பு மனுவை வாபஸ் பெறுவதற்கான அவகாசம் இன்று மாலை 3 மணியுடன் நிறைவு பெறப்பட்டது. பின்னர் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

77 வேட்பாளர்கள் + நோட்டா என 78 பெயர்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்த வேண்டியது உள்ளது. ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு 16 வேட்பாளர்கள் என்ற கணக்கீட்டின் அடிப்படையில், 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒரு வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும், ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ‘கை’ சின்னமும் கே.எஸ்.தென்னரசுவுக்கு ‘இரட்டை இலை’ சின்னமும் ஒதுக்கீடு. தேமுதிக வேட்பாளர் ஆனந்துக்கு ‘முரசு’ சின்னம் ஒதுக்கீடு. டார்ச் லைட், குக்கர் சின்னங்கள் சுயேட்சைகளுக்கான சின்னம் பட்டியலில் உள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools