Tamilசெய்திகள்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியா? அல்ல ஆதரவா? – இன்று பா.ஜ.க ஆலோசனை

அ.தி.மு.க. கூட்டணியில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை சந்திக்கப் போவது எந்த கட்சி? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த முறை த.மா.கா. போட்டியிட்ட நிலையில் இந்த முறை அ.தி.மு.க. களம் இறங்க முடிவு செய்தது. இதற்காக த.மா.கா.விடம் பேசி உறுதியும் செய்யப்பட்டது.

இந்த நிலையில் அ.தி.மு.க. சார்பில் நாங்களும் போட்டியிடப் போகிறோம் என்று ஓ.பன்னீர்செல்வமும் அறிவித்து இருக்கிறார். அத்துடன் இருதரப்பினரும் சென்னையில் உள்ள பா.ஜனதா அலுவலகத்துக்கு சென்று மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து பேசி ஆதரவும் கோரினார்கள்.

இரு தரப்பும் ஆதரவு கோரியதால் யாருக்கு ஆதரவு கொடுப்பது என்ற தர்ம சங்கடமான நிலைக்கு பா.ஜனதா தள்ளப்பட்டு உள்ளது. கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சி அ.தி.மு.க. என்பதால் அந்த கட்சி போட்டியிடுவதில் பிரச்சினை இல்லை. ஆனால் இரு தரப்பும் மல்லு கட்டுவதால் பா.ஜனதாவும் யோசிக்கிறது.

களம் இறங்கி பலத்தை பார்த்து விடுவது என்று யோசித்த பா.ஜனதாவுக்கு பழம் நழுவி பாலில் விழுந்தது போல் நிலைமை சாதகமாகி இருக்கிறது. யாருக்கு ஆதரவளித்தாலும் கூட்டணிக்குள் பாதிப்பு வரும் என்பதை காரணம் காட்டி பா.ஜனதாவே போட்டியிட்டு அ.தி.மு.க.வின் ஆதரவை கேட்டுப்பெறலாம் என்று பா.ஜனதா தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள்.

ஏற்கனவே தேர்தல் தேதி அறிவித்ததுமே தேர்தல் பணிகளை கவனிக்க பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை 14 பேர் கொண்ட குழுவை அமைத்தார். அந்த குழுவில் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் வேதானந்தம், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினரும், மொடக்குறிச்சி எம்.எல்.ஏ.வுமான சரஸ்வதி உள்ளிட்டோர் இடம் பெற்று உள்ளனர். இவர்கள் தொகுதி முழுவதும் ஆய்வு செய்து அதன் அறிக்கையை மாநில தலைமைக்கு வழங்கி உள்ளனர்.

இதுதவிர கட்சி மேலிடம் அனுப்பிய தனிக்குழு ஒன்றும் சர்வே நடத்தி உள்ளது. இந்த குழுக்களின் அறிக்கை இன்று கொடுக்கப்படுகிறது. அந்த அறிக்கையின் அடிப்படையில் தொகுதியின் கள நிலவரத்தை ஆய்வு செய்கிறார்கள். தொகுதி நிலவரம் சாதகமாக இருந்தால் பா.ஜனதா கண்டிப்பாக போட்டியிடும்.

அதேநேரம் அ.தி.மு.க.வின் இரு அணிகளையும் சமாதானப்படுத்தி தங்களுக்காக விட்டுக் கொடுக்கும்படி கேட்கும் என்கிறார்கள் கட்சி நிர்வாகிகள். இந்த நிலையில் இடைத்தேர்தல் குறித்து பா.ஜனதா தேர்தல் குழுவினர் மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் மற்றும் மாநில நிர்வாகிகளுடன் ஈரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்கள். ஆளுங்கட்சியான தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரசை எதிர்க்க வலுவான கூட்டணி வேண்டும். ஆனால் அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தனித்தனியாக களம் இறங்கினால் காங்கிரஸ் எளிதில் வெற்றி பெற்று விடும்.

எனவே எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சமரசம் செய்வது தொடர்பாக ஆலோசிக்கிறார்கள். பா.ஜனதா போட்டியிட்டால் ஆதரவு அளிப்போம் என்று ஏற்கனவே ஓ.பன்னீர் செல்வம் கூறி உள்ளார். அதேபோல் புதியநீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் பா.ஜனதா போட்டியிட்டால் வரவேற்போம் என்று தெரிவித்துள்ளார். எனவே ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரசுடன் நேருக்குநேர் மோத பா.ஜனதா தயாராகி வருகிறது.

அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் அதற்கு முன்னோட்டமாக தங்களது செல்வாக்கை தெரிந்து கொள்ளும் வகையில் பா.ஜனதா இந்த தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகிறது. அ.தி.மு.க.வில் ஏதாவது ஒரு அணியை துணிந்து ஆதரிப்பதா? அல்லது துணிந்து களம் இறங்குவதா? என்ற இரண்டு வழிகளும் தான் பா.ஜனதாவுக்கு உள்ளது. இதில் எதை தேர்வு செய்யப்போகிறார்கள் என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்.