X

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இன்று ஆலோசனை

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஈ.வெ.ரா. திருமகன் மாரடைப்பால் காலமானார். இதனை தொடர்ந்து இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான மனுத்தாக்கல் வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது. இதையொட்டி அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க சுறுசுறுப்பாகி வருகிறது.

இந்த நிலையில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியே இந்த தேர்தலில் போட்டியிடும் என கட்சியின் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி அறிவித்துள்ளார். இதற்கு தி.மு.க.வும் பச்சைக்கொடி காட்டியுள்ளது. கடந்தமுறை நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் த.மா.கா. வேட்பாளர் யுவராஜ் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். எனவே த.மா.கா. போட்டியிடுவது குறித்து அ.தி.மு.க. 2-ம் கட்ட தலைவர்களிடையே த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து அ.தி.மு.க. விருப்பத்தை த.மா.கா. ஏற்றுக்கொண்டது. இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. போட்டியிடுவதாக இன்று அறிவித்துள்ளார். இதற்கிடையே இந்த தேர்தலில் பா.ஜ.க. போட்டியிட வேண்டும் என்று அக்கட்சியினர் விரும்புகிறார்கள்.

ஏற்கனவே இந்த மாவட்டத்தில் உள்ள மொடக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ.வாக பா.ஜ.க.வை சேர்ந்தவர் உள்ளார். எனவே பா.ஜ.க. போட்டியிட்டால் கட்சி வளர்ச்சி பெறும் என்று அக்கட்சியினர் வலியுறுத்தி வருகிறார்கள். எனவே இந்த தேர்தலில் பா.ஜ.க. போட்டியிடுமா என கேள்வி எழுந்துள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் பா.ஜ.க.வின் மாநில செயற்குழு கூட்டம் கடலூரில் இன்று காலை தொடங்கி மாலை வரை நடக்கிறது. இந்த கூட்டத்தில் மத்திய இணை மந்திரி எல்.முருகன், முன்னாள் மத்திய மந்திரிகள் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

அப்போது பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கட்சி வளர்ச்சி குறித்தும், ஈரோடு தொகுதியில் போட்டியிடுவது குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளார். இதில் பா.ஜ.க. ஈரோடு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுமா என்பது தெரியவரும்.