ஈரோடு இடைத்தேர்தல் – அமமுக வேட்பாளரை ஆதரித்து 12 ஆம் தேதி முதல் டிடிவி தினகரன் பிரச்சாரத்தை தொடங்குகிறார்

ஈரோட்டில் இன்று அ.ம.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சண்முகவேலு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எங்களுக்கு தேர்தல் களம் புதியதல்ல. பாராளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என பல தேர்தல்களை சந்தித்துள்ளோம். ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் மக்களை சந்தித்து ஆளும் அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை எடுத்துரைப்போம்.

மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வு போன்ற மக்கள் பிரச்சினையை முன்வைத்து களம் காணுவோம். குறைந்த வாக்குகள் முந்தைய தேர்தலில் பெற்றிருந்தாலும், இந்த தேர்தல் எங்களுக்கான தேர்தலாக பார்க்கிறோம். டி.டி.வி.தினகரன் மக்களை நேரடியாக நியாயமான முறையில் சந்தித்து வாக்கு சேகரிக்க கூறியுள்ளார்.

அ.தி.மு.க.வில் இலையைப் பிடிக்க இரு அணிகளிடையே போட்டி நடந்து வருகிறது. நாங்கள் தனி கட்சியாக நின்று செயல்படுகிறோம். ஈரோடு கிழக்கு தொகுதியில் அடிப்படை வசதி கூட செய்யப்படவில்லை. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கு பிறகு தற்போது 2-வது முறையாக இடைத்தேர்தலை சந்திக்கிறோம். எங்கள் கட்சி வேட்பாளரை ஆதரித்து டி.டி.வி.தினகரன் 12-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை ஈரோட்டில் பல்வேறு பரிமாணங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.

இடைத்தேர்தலில் பணம் பட்டுவாடா குறித்து புகார் எழுந்துள்ளது. இது கண்டனத்திற்குரியது. பணம் பட்டுவாடா குறித்து நாங்களும் தேர்தல் கமிஷனில் புகார் அளிப்போம். மத்திய, மாநில தேர்தல் ஆணையம் ஒருங்கிணைந்து செயல்பட்டு பணபட்டுவாடாவை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் தேர்தல் ஆணையம் ராணுவத்தை கொண்டு வந்து பணம் பட்டுவாடாவை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools