ஈரான் மீது இணைய போரை தொடங்கிய அமெரிக்கா

ஈரானின் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதால் அவ்விருநாடுகள் இடையே பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. இந்த பிரச்சினை இருநாடுகளுக்கும் இடையே போர் மூளும் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது. இந்த சூழலில் தங்கள் வான்பரப்பில் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது.

இதனால் கோபம் அடைந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஈரான் மீது ராணுவ தாக்குதலுக்கு உத்தரவிட்டு, பின்னர் உடனடியாக அதை திரும்பப்பெற்றார். தாக்குதல் நடத்தினால் 150 பேர் கொல்லப்படுவார்கள் என்று ராணுவத்தளபதி கூறியதால் தனது முடிவை மாற்றிக் கொண்டதாக டிரம்ப் அறிவித்தார்.

ஆனாலும் ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை எடுக்க உள்ள கோப்புக்கள் தனது மேசையில் இன்னும் இருப்பதாகவும் அதற்கு எப்போது வேண்டுமானாலும் வேலை கொடுக்க முடியும் என்று அவர் கூறினார். அதே சமயம் தன் மீது ஒரு குண்டு விழுந்தால் அதற்காக அமெரிக்கா பன்மடங்கு விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என ஈரான் எச்சரிக்கை விடுத்தது.

இப்படி நாளுக்குநாள் இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் ஈரான் புரட்சிகர ஆயுதப்படையின் ஆயுத கட்டுப்பாட்டு கம்யூட்டர்கள் மீது அமெரிக்கா இணைய தாக்குதல் நடத்தியுள்ளது.

இதனால் ஈரானின் ராக்கெட் மற்றும் ஏவுகணைகளை ஏவும் அமைப்புகளின் கட்டுப்பாட்டு கணினிகள் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி டிரம்பிடம் ஒப்புதல் பெற்ற பிறகே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதற்காக வாரக்கணக்கில் திட்டமிட்டதாகவும் அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஓமன் வளைகுடா பகுதியில் எண்ணெய் கப்பல்கள் மீது கண்ணி வெடிதாக்குதல் நடத்தப்பட்டதற்கும், உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கும் பதிலடியாக ஈரான் மீது இந்த இணைய தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த இணைய தாக்குதலில் ஈரான் புரட்சிகர ஆயுதப்படையின் கம்ப்யூட்டர்கள் பல செயலிழந்ததாகவும், அவை மீண்டும் பயன்பாட்டுக்கு வர குறிப்பிட்ட காலம் ஆகும் என்று கூறப்படுகிறது.

முன்னதாக ஈரான் அமெரிக்கா மீது இணைய தாக்குதல் நடத்தவும், அமெரிக்க கடற்படையின் கம்ப்யூட்டர்களை ‘ஹேக்’ செய்யவும் முயற்சிப்பதாக டிரம்ப் நிர்வாகம் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.

ஈரான் மீது அமெரிக்கா இணைய தாக்குதல் நடத்தியது மட்டும் இன்றி அந்நாட்டின் மீது, இதுவரை வேறு எந்த நாட்டிற்கும் விதிக்காத கடுமையான பொருளாதார தடைகளையும் விதித்துள்ளது.

இது குறித்து டிரம்ப் கூறுகையில், “ஈரான் அணு ஆயுதங்களைப் பெறுவதை தடுக்க இந்த பொருளாதாரத் தடைகள் அவசியமானது. ஈரான் தனது போக்கை மாற்றாவிட்டால் அந்நாட்டின் மீதான பொருளாதார அழுத்தம் தொடரும்” என்றார்.

மேலும் அவர், “ஈரானுடன் போரை விரும்பவில்லை. ஆனால் மோதல் ஏற்பட்டு விட்டால் அந்நாடு முற்றிலுமாக அழிக்கப்படும் நிலைக்கு தள்ளப்படும்” என கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools