Tamilசெய்திகள்

ஈரான் அதிபராக பதவி ஏற்ற மசூத் பெசஸ்கியான்

ஈரான் அதிபராக இருந்த இப்ராஹிம் ரசி கடந்த மே 17 ஆம் தேதி அஜர்பைஜான் எல்லையில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். எனவே அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஈரானில் கடந்த ஜூன் 28 நடந்தது.

இதில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஜூலை 5 ஆம் தேதி நடந்த இரண்டாம் கட்ட தேர்தலில் சீர்திருத்தக் கட்சி வேட்பாளர் மசூத் பெசஸ்கியான் 54 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதனைத்தொடர்ந்து நேற்று நடந்த பதவியேற்பு விழாவில் இரான் அதிபராக மசூத் பெசஸ்கியான் பதவியேற்றுள்ளார்.

பாலஸ்தீன போர், ஹெஸ்புல்லா -இஸ்ரேல் போர் பதற்றம் ஆகிய பிரச்சனைகளுக்கு மத்தியில் மசூத் பெசஸ்கியானின் இந்த பதவியேற்பு விழா முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த விழாவில் இந்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, துருக்கி, சவுதி அரேபியா, எகிப்து, ஈராக் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அமைப்புகளின் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த பதவியேற்பு விழாவில் காசாவில் இஸ்ரேலின் போர்க் குற்றங்கள் குறித்து பாராளுமன்ற சபாநாயகர் பேசுகையில், அவையில் இருந்த ‘பலர், இஸ்ரேல் அழியட்டும், அமெரிக்கா அழியட்டும்’ [Death to Israel, Death to America] என்று முழக்கம் எழுப்பினர். இந்த முழக்கங்களுக்கு மத்தியில் மசூத், அதிபராக பதவியேற்றுக்கொண்டார

பதவியேற்பின்போது ‘புனித குரான் மற்றும் ஈரான் பிரஜைகளின் முன்னிலையில், இஸ்லாமிய குடியரசுக்கும், நாட்டின் அரசியலமைப்புக்கும் பதுகள்வளனாக இருப்பேன் என்று கடவுள் மீது ஆணையாக உறுதியேற்கிறேன்’ என்று மசூத் தெரிவித்தார்.

இதற்கிடையில், ஹிஸ்புல்லாவின் சமீபத்திய தாக்குதலுக்கு பழிவாங்கும் விவாதமாக லெபனான் தலைநகர் பெய்ருட் மீது இஸ்ரேல் நேற்று வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் ஹிஸ்புல்லாவின் முக்கியத் தலைவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அறிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு முன்பிருந்தே, லெபனானை இஸ்ரேல் தகுமானால் தீவிரமான போரில் ஈரான் இறங்கும் என்று மசூத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.