சீனாவின் வுகான் மாகாணத்தில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பரவி வருகிறது. இந்தியா, தாய்லாந்து, சிங்கப்பூர் நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் இப்போது வளைகுடா நாடுகளிலும் பரவி வருகிறது. அங்கிருந்து ஈரான் நாட்டிற்கும் பரவி, பலரையும் காவு வாங்கி வருகிறது.
ஈரானில் மட்டும் இதுவரை 26 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியாகி உள்ளனர். 141 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஈரான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக வெளிநாட்டு விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஈரானில் தங்கியுள்ள வெளிநாட்டினர் சொந்த நாடுகளுக்கு திரும்ப முடியாத நிலையில் உள்ளனர்.
தமிழகத்தில் இருந்து 900-க்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்ய ஈரான் நாட்டில் தங்கி உள்ளனர். இவர்களில் 700-க்கும் அதிகமானோர் குமரி மாவட்ட மீனவ கிராமங்களை சேர்ந்தவர்கள். இவர்கள் ஈரானின் சீரா துறைமுகத்தில் தங்கி இருந்து மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள். ஈரானில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டு விட்டதால் இவர்களால் நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஈரான் நாட்டில் சிக்கித் தவிக்கும் 300 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், ஈரான் நாட்டில் சிக்கித் தவிக்கும் 300 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.