ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க தூதரகம், ஹிஸ்புல்லா ஆதரவாளர்களால் சூறையாடப்பட்டது. இதற்கு ஈரான் தான் பொறுப்பேற்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். அத்துடன் இதற்கு மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டும் என்றும் எச்சரித்திருந்தார்.
இந்நிலையில், ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில், அமெரிக்கா ராக்கெட் குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில், ஈரானிய புரட்சி பாதுகாப்பு படையின் குத்ஸ் படைப்பிரிவு தளபதி காசிம் சோலிமானி, ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர் குழுவின் முக்கிய கமாண்டர் அபு மகாதி உள்ளிட்ட 7 பேர் கொல்லப்பட்டனர்.
ஈரான் ராணுவ தளபதி கொல்லப்பட்டதை அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் உறுதி செய்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவின்பேரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறியுள்ளது.
ஈராக்கில் தாக்குதல் நடத்திய பின் அமெரிக்க அதிபர் டிரம்ப், தனது ட்விட்டர் பக்கத்தில், அமெரிக்க கொடியை பதிவிட்டுள்ளார். வேறு எந்த தகவலையும் அவர் தெரிவிக்கவில்லை. தேசியக்கொடியை பதிவிட்ட 2 மணி நேரத்திற்குள் 1.8 லட்சத்துக்கும் அதிகமானோர் அதனை லைக் செய்துள்ளனர். 47 ஆயிரம் பேர் ரீடுவீட் செய்தனர்.
ஈராக்கில் அமெரிக்க தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோரை தாக்க காசிம் சோலிமானி திட்டமிட்டிருந்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்கர்களை தாக்க திட்டமிட்டதால் காசிம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறியுள்ளது.