ஈராக்கில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் 99 பேர் பலி! – ஐ.நா கண்டனம்
ஈராக்கில் வேலையின்மை உள்ளிட்ட பொருளாதார பிரச்சனைகள் அதிகரித்து வரும் அதே வேளையில், அங்கு ஊழல் தலைவிரித்தாடுகிறது. இதனால் அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இதற்கிடையே, தலைநகர் பாக்தாத்தில் அரசுக்கு எதிராக நடந்த பேரணியில் பெரும் வன்முறை வெடித்தது. பாக்தாத்தில் உள்ள வரலாற்றுச் சின்னமான தரீர் சதுக்கத்தை நோக்கி பேரணியாக சென்ற ஆயிரத்துக்கும் அதிகமானவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். அதை மீறி போராட்டக்காரர்கள் தொடர்ந்து முன்னேறியதால் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
ஐந்தாவது நாளை எட்டியுள்ள இந்த போராட்டம் நாட்டின் பல மாகாணங்களில் பரவியுள்ள நிலையில் இருதரப்பு மோதல்களில் போராட்டக்காரர்கள் பாதுகாப்பு படையினர் என 99 பேர் உயிரிழந்தனர். சுமார் 4 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், ஈராக்கில் அரசுக்கு எதிரான வன்முறை போராட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 100-ஐ நெருங்கியுள்ளது. இந்த சம்பவத்துக்கு ஐக்கிய நாடுகள் சபை தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஐநாவெளியிட்டுள்ள அறிக்கையில், அரசுக்கு எதிரான போராட்டத்தில் 99 பேர் பலியானது துன்பகரமானது. இது நிச்சயம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது.