இஸ்லாமியர்களை தாக்கி பேசும் பிரதமர் மோடி மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்படும்? – எம்.பி தயாநிதி மாறன் கேள்வி

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் பிரதமர் மோடி பேசியது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள ஒரு கருத்தை குறிப்பிட்டு பேசும்போது கூறியதாவது:-

இது நகர்ப்புற நக்சல் மனநிலை. தாய்மார்கள், சகோதரிகள்… அவர்கள் உங்களுடைய மங்களசூத்ராவை (தாலி) கூட விட்டு வைக்கமாட்டார்கள். அவர்கள் அந்த நிலைக்கு கூட போவார்கள்… தாய்மார்கள், சகோதரிகள் வைத்துள்ள தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு, தகவல்கள் பெறப்பட்டு, பகிர்ந்து கொடுப்போம் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சொல்கிறது.

அவர்கள் யாருக்கு பகிர்ந்து அளிப்பார்கள். முந்தைய மன்மோகன் சிங் அரசு, நாட்டின் சொத்துகளில் முஸ்லிம்களுக்கே முதல் உரிமை எனத் தெரிவித்திருந்தது.

முன்னதாக, அவர்களுடைய (காங்கிரஸ்) அரசு ஆட்சியில் இருந்தபோது, நாட்டிகள் சொத்துகளில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை எனக் கூறியது. இதன் அர்த்தம் யாருக்கு சொத்து பகிர்ந்தளிக்கப்படும்?. அதிக குழந்தைகளை வைத்திருப்பர்களுக்கிடையே பகிர்ந்து அளிக்கப்படும். இந்திய நாட்டுக்குள் ஊடுருவியர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். உங்களுடைய கடின உழைப்பால் சம்பாதித்த பணம் ஊடுருவியவர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா?

இவ்வாறு பிரதமர் மோடி பேசியிருந்தார்.

இந்நிலையில் இது தொடர்பாக, தனது எக்ஸ் பக்கத்தில் திமுக எம்.பி தயாநிதி மாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், “தேர்தல் ஆணையத்திடம் 3 கேள்விகள் கேட்கிறேன்.

1. வெளிநாட்டிலிருந்து ஊடுருவி இந்தியாவுக்குள் வந்தவர்கள் என இஸ்லாமியர்களை குறிப்பிட்டிருக்கும் மோடி மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்படும்?

2. மன்மோகன் சிங் சொன்னதை திரித்து, மதத்தின் பேரில் மக்களை பிரிக்கும் மோடியின் மீது என்ன நடவடிக்கை பாயும்?

3. ஒரு சமூகத்தின் மீது துவேஷத்தைக் கொட்டி இன்னொரு சமூகத்தின் மனங்களில் நச்சை விதைக்கும் மோடி மீது ஏன் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை?

10 ஆண்டுகால பாஜகவின் ஆட்சியில் எந்த வளர்ச்சியும் இல்லாததால், பாஜகவின் உயர்மட்டத் தலைவர்கள் கூட பழைய வகுப்புவாத அஜெண்டாவை நாடியுள்ளார். மக்கள் தங்கள் வாக்கு மூலம் பாஜகவிற்கு தக்க பதிலை வழங்குவார்கள்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools