பெங்களூருவில், இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த க்ரயோஜெனிக் எஞ்சின் உற்பத்தி வசதியை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நேற்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றி அவர், கூறியுள்ளதாவது:
இந்துஸ்தான் ஏரோநாடிக்கல் நிறுவனமும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமும் (இஸ்ரோ) இணைந்து நாட்டின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றி வருகின்றன. நாட்டின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை வலுப்படுத்த உதவும் பல்வேறு கருவிகள் மற்றும் திட்டங்களை மேம்படுத்துவதில் இந்த இரண்டு நிறுவனங்களும் முக்கியப் பங்கு வகித்துள்ளன.
பாதுகாப்பு தொடர்பாக கருவிகளை உற்பத்தி செய்யும் இந்துஸ்தான் ஏரோநாடிக்கல் நிறுவனம் நம் நாட்டின் விலை மதிப்பற்ற சொத்து. நாடு முழுமைக்கும் க்ரயோஜெனிக் மற்றும் செமி க்ரயோஜெனிக் எஞ்சின்கள் உற்பத்திக்கான அதிநவீன வசதியை அந்த நிறுவனம் கொண்டிருப்பது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தருணமாகும்.
நாட்டின் பெருமைகளில் ஒன்றான இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் வேகமான வளர்ச்சி காரணமாக க்ரயோஜெனிக் உற்பத்தி திறன் கொண்ட உலகின் ஆறாவது நாடாக இந்தியா மாற்றியுள்ளது. இது தொழில்நுட்ப ரீதியாக வளர்ச்சி பெற்ற நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.