Tamilசெய்திகள்

இஸ்ரேல் நாட்டுக்கான விமான சேவையை ரத்து செய்தது ஏர் இந்தியா

இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலை அடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதியில் இருந்து டெல் அவிவ் நகருக்கு ஏர் இந்தியா தனது விமான சேவையை நிறுத்தியது. 5 மாத இடைவெளிக்கு பிறகு கடந்த மார்ச் 3-ம் தேதி டெல் அவிவ் நகருக்கு ஏர் இந்தியா மீண்டும் விமான சேவையை தொடங்கியது.

இதற்கிடையே, ஈரானில் ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் இதுவரை இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை என்றபோதும், அந்த நாட்டிற்கான விமான சேவைகளை பல நிறுவனங்கள் ரத்துசெய்யத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில், இந்தியாவில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்குச் செல்லும் விமானங்கள் மற்றும் டெல் அவிவ் நகரில் இருந்து இந்தியாவிற்கு வரும் விமானங்கள் அனைத்தும் வரும் 8-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஏர் இந்தியா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், மத்திய கிழக்கின் சில பகுதிகளில் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு டெல் அவிவுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் எங்கள் விமானங்களின் திட்டமிடப்பட்ட பயணத்தை ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நிறுத்தி வைத்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

இதேபோல் பல்வேறு விமான நிறுவனங்களும் தங்களது சேவையை ரத்துசெய்துள்ளன. ஏற்கனவே ஏப்ரல் 19 முதல் 30ம் தேதி வரை இஸ்ரேலுக்கான விமான சேவையை ஏர் இந்தியா ரத்துசெய்தது குறிப்பிடத்தக்கது.