இஸ்ரேலுக்கு ஆயுதம் ஏற்றி சென்ற சென்னை கப்பலுக்கு ஸ்பெயின் அனுமதி மறுப்பு
பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. காசாவில் இஸ்ரேல் தாக்குதலில் பொதுமக்கள் உயிரிழப்புகளை ஸ்பெயின் கடுமையாக விமர்சித்து வருகிறது. மேலும் பெல்ஜியத்துடன் இணைந்து இஸ்ரேலின் ஆயுத ஏற்றுமதி உரிமங்களை நிறுத்தி வைத்துள்ளது.
இந்த நிலையில் இஸ்ரேலுக்கு சென்ற ஆயுத கப்பலுக்கு ஸ்பெயின் அனுமதி மறுத்துள்ளது. சென்னையில் இருந்து கடந்த 8-ந்தேதி, டென்மார்க் கொடியுடன் மரியான் டானிகா என்ற கப்பல் இஸ்ரேலின் ஹைபா துறைமுகத்திற்கு புறப்பட்டு சென்றது. அந்த கப்பலில் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் கொண்டு செல்லப்படுகிறது. அந்த கப்பல் ஸ்பெயின் நாட்டு துறைமுகத்துக்கு சென்றபோது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஸ்பெயின் வெளியுறவு அமைச்சர் ஜோஸ் மானுவல் கூறும்போது, சென்னையில் இருந்து இஸ்ரேலுக்கு ஆயுதங்களை ஏற்றிச் சென்ற கப்பலை துறைமுகத்தில் நிறுத்த ஸ்பெயின் அரசு அனுமதி மறுத்துள்ளது. நாங்கள் இதைச் செய்வது இதுவே முதல் முறை. இஸ்ரேலுக்கு ஆயுதங்களை எடுத்துச் செல்லும் எந்தவொரு கப்பலுடனும் இதே நிலை கடைபிடிக்கப்படும். மத்திய கிழக்கு பகுதிக்கு அதிக ஆயுதங்கள் தேவையில்லை, அதற்கு அதிக அமைதி தேவை என்றார்.
கப்பலில் 27 டன் வெடிபொருட்கள் இருப்பதாக கூறப்படுகிறது. கப்பலில் உள்ள பொருட்கள் ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதா மற்றும் ஏற்றுமதிக்கு தடை செய்யப்படாத பொருட்களா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.