இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே மீண்டும் மோதல் – 40-க்கும் மேற்பட்டவர்கள் பலி
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனர்களுக்கும் இடையே கடந்த சில நாட்களாக கடுமையான மோதல் நிலவி வருகிறது. இஸ்ரேலின் ஜெருசலேமில் உள்ள அல் அக்ஷா வழிபாட்டு தளத்தில் பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடந்த திங்கட்கிழமை மோதல் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா முனையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பினரின் முக்கிய கட்டிடங்கள் தரைமட்டமாகின. இதனை தொடர்ந்து நேற்று முழுவதும் இருதரப்பும் மாறி மாறி தாக்குதலில் ஈடுபட்டு வந்தனர். இன்றும் தாக்குதல் நீடித்தது. குறிப்பாக இன்று அதிகாலையில் இஸ்ரேல் ராணுவம் நூற்றுக்கணக்கான குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளது.
இவ்வாறு இரு தரப்பும் மாறி மாறி நடத்திய தாக்குதல்களில் பெரும் உயிரிழப்புகளும் பொருட்சேதங்களும் ஏற்பட்டுள்ளன. இஸ்ரேல் தரப்பில் 5 பேரும், காசா பகுதியில் 35 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். 2014ல் நடந்த போருக்குப் பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய மோதல் இதுவாகும்.
இந்த மோதல் நீடிக்கும்பட்சத்தில் காசா முனையத்தில் நிலைமை கட்டுப்பாட்டை மீறிப்போகும் என சர்வதேச தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.