Tamilசெய்திகள்

இஸ்ரேலில் பெண் பத்திரிகையாளர் சுட்டுக் கொலை!

இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே மேற்குகரை பகுதி, ஜெருசலேம் நகரம் யாருக்குச் சொந்தம் என்பதில் மோதல் நீடிக்கிறது. இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள அப்பகுதிகளில் இன்னமும் பல லட்சம் பாலஸ்தீனர்கள் வாழ்ந்து வருகின்றனர். இஸ்ரேல் ஆக்கிரமிப்பை எதிர்த்து இவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாலஸ்தீன பயங்கரவாதிகளை களையெடுப்பதாக கூறி மேற்குகரை பகுதியில் இஸ்ரேல் வீரர்கள் அடிக்கடி தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர். இந்த தேடுதல் வேட்டைகளில்  அப்பாவி பாலஸ்தீன மக்கள் சுட்டுக்கொல்லப்படுவது தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில், மேற்குகரை பகுதியில் ஜெனின் நகரில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாமுக்குள் நேற்று காலை இஸ்ரேல் ராணுவ வீரர்கள் அதிரடியாக நுழைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது இஸ்ரேல் வீரர்கள் துப்பாக்கியால் சுட்டதில் அல் ஜசிரா டி.வி.யின் பெண் பத்திரிகையாளரான ஷிரீன் அபு அக்லே (51), கொல்லப்பட்டார். மற்றொரு பத்திரிகையாளர் படுகாயம் அடைந்தார்.

பாலஸ்தீன அகதிகள் முகாமில் இஸ்ரேல் ராணுவ வீரர்களின் தேடுதல் வேட்டை குறித்து செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டதாக கத்தார் நாட்டின் அரசு செய்தி சேனலான அல் ஜசிரா தெரிவித்துள்ளது.

இது தொடர்பான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது என இஸ்ரேல் பாதுகாப்புத் துறை மந்திரி தெரிவித்தார்.