இஸ்ரேலில் சிக்கி தவிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் – மத்திய அமைச்சருக்கு கேரள முதலமைச்சர் கடிதம்
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த சனிக்கிழமை திடீரென ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் பாதுகாப்புப்படை காசா முனையில் ஹமாஸ் அமைப்பினரின் இருப்பிடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக காசா முனை, மேற்குகரை உள்ளிட்ட பகுதிகளில் போர் பதற்றம் நிலவி வருகிறது.
இந்த நிலையில் இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கருக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், “இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களில் சுமார் 7,000 பேர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அங்கு போர் நீடிப்பதால் இவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இதனால் கேரளாவில் உள்ள அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மிகுந்த கவலையில் உள்ளனர். எனவே மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டு, இஸ்ரேலில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.