இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த சனிக்கிழமை திடீரென ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் பாதுகாப்புப்படை காசா முனையில் ஹமாஸ் அமைப்பினரின் இருப்பிடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக காசா முனை, மேற்குகரை உள்ளிட்ட பகுதிகளில் போர் பதற்றம் நிலவி வருகிறது.
இந்த நிலையில் இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்கள் தாய் நாட்டுக்கு திரும்ப விரும்பினால் அவர்களை பத்திரமாக அழைத்து வருவதற்கான ‘ஆபரேஷன் அஜய்’ என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தனது ‘எக்ஸ்’ சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இஸ்ரேலில் இருந்து இந்தியர்களை மீட்பதற்காக ‘ஆபரேஷன் அஜய்’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பு விமானங்கள் மற்றும் இதர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. வெளிநாட்டில் உள்ள இந்திய குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக முழு அர்ப்பணிப்புடன் செயல்படுகிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.