Tamilவிளையாட்டு

இவர்களைப் பற்றி பேசுவதை நிறுத்த வேண்டும் – விராட் கோலி

இலங்கைக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

புனேயில் நடந்த 3-வது மற்றும் கடைசி ஆட்டத்தில் இந்திய அணி முதலில் விளையாடியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 201 ரன் குவித்தது.

லோகேஷ் ராகுல் 36 பந்தில் 54 ரன்னும் (5 பவுண்டரி, 1 சிக்சர்) ஷிகர் தவான் 36 பந்தில் 52 ரன்னும் (7 பவுண்டரி, 1 சிக்சர்), மனீஷ் பாண்டே 18 பந்தில் 31 ரன்னும் (4 பவுண்டரி), ‌ஷர்துல் தாகூர் 8 பந்தில் 22 ரன்னும் (1 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். சன்டகன் 3 விக்கெட்டும், லகிரு குமாரா, ஹசரங்கா தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் ஆடிய இலங்கை அணி இந்திய வீரர்களின் அபாரமான பந்து வீச்சினால் விக்கெட்டுகளை இழந்து திணறியது. அந்த அணி 15.5 ஓவர்களில் 123 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா 78 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தனஞ்ஜெய டி சில்வா அதிகபட்சமாக 36 பந்தில் 57 ரன்னும் (8 பவுண்டரி, 1 சிக்சர்) , மேத்யூஸ் 20 பந்தில் 31 ரன்னும் (1 பவுண்டரி,3 சிக்சர்) எடுத்தனர். நவ்தீப் சைனி 3 விக்கெட்டும், ‌ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டும், பும்ரா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

இந்த வெற்றி மூலம் இந்தியா 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. ஏற்கனவே இந்தூரில் நடந்த 2-வது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கவுகாத்தியில் நடைபெற இருந்த முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டு இருந்தது.

வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் விராட்கோலி கூறியதாவது:-

இந்த ஆண்டின் தொடக்கம் நன்றாக அமைந்து உள்ளது. சரியான முறையில் ஆட்டத்தை தொடங்கி இருக்கிறோம். ஒரு ஆட்டத்தில் ‘சேசிங்’ செய்தோம். மற்றொரு போட்டியில் முதலில் பேட்டிங் செய்தோம். 2 போட்டியிலும் ஆட்டத்திறன் அபாரமாக இருந்தது. எனவே நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

200 ரன்னை தொட்டதும் நம்பிக்கை அதிகரித்தது. எங்களது தொடக்கம் நன்றாக இருந்தது. ஆனால் மிடில் ஓவரில் விக்கெட் சரிந்ததால் சவாலாக அமைந்தது. ஆனால் மனீஷ் பாண்டேயும், ‌ஷர்துல் தாகூரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

180 ரன்தான் எதிர்பார்த்தேன். ஆனால் 200 ரன்னை குவித்தோம். இது மாதிரியான நிலை நீடிக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.

முதலில் தற்காலிகமாக பேட்டிங் செய்யும் அணியாக நாங்கள் இருக்க விரும்பவில்லை. 2-வது பேட்டிங் செய்யும் போது எவ்வளவு நம்பிக்கையுடன் இருக்கிறோமோ அது போல முதலில் ஆடும் போதும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.

3 தொடக்க வீரர்களும் வலுவாக உள்ளனர். அவர்கள் அணிக்காக சிறப்பாக ஆடுகிறார்கள்.

அவர்கள் பற்றி சிலர் விருப்பங்களை தெரிவிக்கிறார்கள். தொடக்க ஆட்டக்காரர்கள் பற்றி ஒருவருக்கொருவர் எதிராக பேசுவதை நிறுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இது அணி சார்ந்த விளையாட்டு. அணியில் உள்ளவர்களை ஒருவருக் கொருவர் எதிர்த்து நிற்பதற்கான யோசனைகளை தெரிவிப்பதை நான் ஆதரிக்கவில்லை.

இவ்வாறு விராட்கோலி கூறியுள்ளார்.

20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான அணியில் தவானுக்கு பதிலாக ராகுலை தொடக்க வீரராக சேர்க்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் ஸ்ரீகாந்த், கவுதம் காம்பீர் ஆகியோர் சமீபத்தில் யோசனை தெரிவித்து இருந்தனர். தவான் நெருக்கடியில் இருப்பதாகவும் கூறி இருந்தனர்.

நேற்றைய போட்டியில் தவான் சிறப்பாக ஆடி அரை சதம் எடுத்தார். முன்னாள் வீரர்கள் தொடக்க ஆட்டக்காரர்கள் குறித்து பேசுவதைத்தான் கோலி மறைமுகமாக சாடியுள்ளார்.

இலங்கைக்கு எதிரான 20 ஓவர் தொடரை வென்றதன் மூலம் இந்தியா ‘ஹாட்ரிக்‘ தொடரை கைப்பற்றி சாதனை புரிந்தது.

வங்காளதேசம் (2-1), வெஸ்ட் இண்டீசுக்கு (2-1) எதிரான 20 ஓவர் தொடரை இந்தியா தொடர்ச்சியாக கைப்பற்றி இருந்தது. அந்த வரிசையில் தற்போது இலங்கை தொடரும் இணைந்து உள்ளது.

இந்திய அணி அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டியில் விளையாடுகிறது முதல் ஆட்டம் வருகிற 14-ந்தேதி மும்பையில் நடக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *