இளையராஜா வீட்டில் கிரிக்கெட் ஆடிய ரஜினிகாந்த்

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் படத்தின் கதை விவாதம் பரபரப்பாக நடந்து வருகிறது. படத்தின் திரைக்கதையில் இன்னும் சிறப்பு சேர்க்க ரஜினி தரப்பில் சில யோசனைகள் சொல்லி இருக்கிறார்கள். அதன்படி கே.எஸ்.ரவிகுமார் திரைக்கதை எழுதுவார் என்று தெரிகிறது.

ரஜினிக்கு சமீபத்திய குடும்பப் பிரச்சினைகள் அவரை சோர்வடையச் செய்திருந்தது. புதுப்பட வேலைகள் அவருக்கு புத்துணர்ச்சியூட்டி அவரை உற்சாகமடைய வைத்திருக்கிறது.
இது போன்ற தருணங்களில் சில வருடங்களுக்கு முன்பு இமயமலை சென்று திரும்புவதை ரஜினி வழக்கமாக வைத்திருந்தார். அங்கு அவருக்கு கிடைக்கும் ஆன்மிக போதனைகள் மற்றும் ஆத்மஞான அமைதி அவரை உற்சாக மனநிலைக்கு மாற்றி வைக்கும்.

ஆனால் இன்று அவரது உடல்நிலை மாற்றத்திற்குப் பிறகு இமயமலைக்கு போவதை தவிர்த்து வருகிறார். அதற்கு மாற்றாக ஆன்மிக அமுதம் அருந்தும் இடம் எங்காவது கிடைக்குமா? என்று ரஜினி ஏங்கிக் கொண்டிருந்தார். அந்த குறைதீர்ந்து விட்டது. இசைஞானி இளையராஜாவும், அவரது வீடும் தான் ரஜினியின் ஆன்மிக தாகத்தை தணிக்கும் இடமாக உள்ளன. அதனால்தான் சமீபகாலத்தில் பல முறை இளையராஜாவை சந்தித்துப் பேசியிருக்கிறார் ரஜினி.

இங்கு வந்தால் நான் நிம்மதியாக உணர்கிறேன் சாமி.. உங்களுக்கு ஒன்றும் தொந்தரவு இல்லையே என்று இளையராஜாவிடமே ரஜினி ஏக்கத்துடன் கேட்டது இதனால்தான். இளையராஜாவை சந்திப்பது அவருக்கு இமய மலைக்கு போய் வந்த மன ஆறுதலை கொடுத்திருக்கிறது என்பதே நிஜம். இருவருக்குமிடையேயான நட்பு என்பது திரைத்தொழிலைத் தாண்டியது.

எப்போதெல்லாம் இளையராஜாவை சந்திக்க வேண்டுமென்று நினைக்கிறாரோ அப்போது ஒரு போனை போட்டு சாமி உங்களைப் பார்க்க வீட்டுக்கு வரலாமா என்று கேட்டு விட்டு புறப்பட்டுவிடுவார் ரஜினி. அப்படி ஒருநாள் ரஜினி இளையராஜாவின் தி.நகர் வீட்டுக்கு செல்ல ரஜினி வருகையால் வீடே குதூகலமாகியிருக்கிறது. அப்போது கார்த்திக் ராஜாவின் மகன் யதீஷ்வர் படித்துக் கொண்டிருந்த நேரம். ரஜினியின் புகழ் வெளிச்சம் புரியாத வயது.

தனிமையில் இளையராஜாவும் ரஜினியும் பேசிக் கொண்டிருக்கும்போது, அங்கிள் என்னோட கிரிக்கெட் விளையாட வர்றீங்களா? என்று யதீஷ்வர் கேட்க, இளையராஜாவே ஒரு நிமிடம் ஸ்தம்பித்துப் போயிருக்கிறார். டேய் அவரு யாரு.. அவரை போயி உன்கூட விளையாடக்கூப்பிடுற என்று செல்லமாய் பேரனை அதட்டல் போட்டிருக்கிறார்.

உடனே பக்கத்திலிருந்த ரஜினி, சாமி விடுங்க குழந்தை தானே என்று சொல்லியபடியே இதோ வர்றேன் கண்ணா என்று துள்ளிக் குதித்து ஓடியிருக்கிறார். ரஜினி பந்து வீச யதீஷ்வர் மட்டையை வீசி ஆட, பிறகு ரஜினி கிரிக்கெட் ஆட இப்படியே பொழுது கழிந்திருக்கிறது. இருவரும் விளையாடுவதை புல்வெளியில் நின்று சிரித்தபடியே ரசித்து மகிழ்ந்திருக்கிறார் இளையராஜா. ரஜினிக்கும் இளையராஜாவுக்கும் இருக்கும் இந்த ஆத்மார்த்தமான ஆன்மிக நட்பு அகல் விளக்கும் ஒளியும்போல ஒன்றைவிட்டு ஒன்று எப்போதும் நீங்காது இணைந்தே இருக்கும்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools