கர்நாடக இசையுலகில் பிரபல வாய்ப்பாட்டு பாடகர்களாக இருப்பவர்கள் பலர் இளையராஜா இசையில் பாடியிருக்கிறார்கள். அந்த பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பும் பெற்றுள்ள நிலையில், கர்நாடக இசையுலகில் முன்னணி பாடகிகளாக வலம் வரும் ரஞ்சனி மற்றும் காயத்ரி ஆகியோர் முதல் முறையாக இளையராஜா இசையில் பாடியுள்ளனர்.
சிபிராஜ், தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘மாயோன்’. இப்படத்தின் திரைக்கதையை எழுதியிருக்கும் அருண்மொழி மாணிக்கம், தனது டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் சார்பில் படத்தை தயாரித்தும் இருக்கிறார். அறிமுக இயக்குநர் என்.கிஷோர் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார்.
இப்படத்திற்காக இளையராஜா எழுதிய “மாயோனே மணிவண்ணா…” என்று தொடங்கும் பாடலை பிரபல கர்நாடக இசை பாடகிகள் ரஞ்சனி மற்றும் காயத்ரி இணைந்து பாடியுள்ளனர். இளையராஜா இசையில் இவர்கள் பாடும் முதல் பாடல் இதுவாகும்.
சமீபத்தில் வெளியான இப்பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றதோடு, இசை ரசிகர்களிடமும் தனி வரவேற்பு பெற்றி இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதிலும் குறிப்பாக ”தீயோரை திருத்தாது திருப்பணி ஏற்கின்றாய்…, கோயில் செல்வம் கொள்ளை போக தடுத்திடாமல் படுத்து கிடப்பது அழகோ..!” என்ற வரிகளில் இசைஞானி, இன்றைய இந்து மதத்தை பின்பற்றுபவர்களிடமுள்ள மனக்குமுறலை நேர்த்தியாக பதிவு செய்திருப்பது திரையிசை ரசிகர்களுக்கு வியப்பை அளித்திருக்கிறது.
‘மாயோன்’ திரைப்படத்தின் உள்ளடக்கத்தை பிரதிபலிக்கும் திரைப்படப் பாடலாக இருந்தாலும், இளையராஜாவின் தெய்வீக இசை, ரஞ்சனி மற்றும் காயத்ரி ஆகியோரின் இனிமையான குரல் ஆகியவற்றால் தமிழகம் முழுவதும் அனைவரது இல்லங்களிலும் தினமும் ஒலிக்கும் பக்தி பாடலாகவும் இருக்கும், என்று பலர் பாராட்டி வருகிறார்கள்.