Tamilசினிமா

இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, சட்டம், சமூக சேவை உள்ளிட்ட துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களுக்கு மாநிலங்களவையின் நியமன எம்.பி. பதவியை வழங்கி மத்திய அரசு கவுரவித்து வருகிறது. தற்போதைய நிலையில் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், ராகேஷ் சின்கா உள்பட 5 பேர் நியமன எம்.பி.க்களாக உள்ளனர்.

மேலும் காலியாக உள்ள இடங்களுக்கு எம்.பி.க்களை நியமனம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. இந்த நிலையில் தமிழகத்தை சேர்ந்த இசைஞானி இளையராஜாவை மாநிலங்களவை எம்.பி.யாக மத்திய அரசு நியமித்து உள்ளது. இசைத்துறையில் அவர் செய்த அளவிட முடியாத சாதனைகளை அங்கீகரித்து கவுரவிக்கும் பொருட்டு இந்த பதவி வழங்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் இளையராஜாவுக்கு மாநிலங்களவை நியமன பதவி வழங்கியிருப்பதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், ‘இசையால் நம் உள்ளங்களையும் மாநிலங்களையும் ஆண்ட ‘இசைஞானி’ இளையராஜா அவர்கள் நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினராய்ச் சிறப்புறச் செயல்பட வாழ்த்துகள்!’ என்று புகழாரம் சூட்டி பதிவிட்டுள்ளார்.