இசையமைப்பாளர் இளையராஜா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோ வளாகத்தில் ஒலிப்பதிவுக் கூடம் வைத்துள்ளார். இந்த வளாகத்தை காலி செய்ய கோரி பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் இளையராஜாவுக்கு உத்தர விட்டது. இதனை எதிர்த்து இளையராஜா சார்பில் சென்னை 17-வது உதவி மாநகர உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை.
இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா தாக்கல் செய்த மனுவில், பிரசாத் ஸ்டுடியோ வளாகத்தில் 42 ஆண்டுகளாக ஒலிப்பதிவுக்கூடம் வைத்துள்ளேன். இந்த ஒலிப்பதிவுக் கூடத்தில் தான் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களுக்கும் இசை அமைத்து உள்ளேன்.
இப்போதும் கூட அங்குதான் பல திரைப் படங்களுக்கு இசையமைப்பு பணிகளை செய்து வருகிறேன். தொடர்ந்து அமைதியான முறையில் இசையமைப்பு பணிகளை மேற்கொள்ள இந்த ஒலிப்பதிவுக் கூடத்தைப் பயன்படுத்திக் கொள்ள கீழமை நீதிமன்றம் எனக்கு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.
எனவே பிரசாத் ஸ்டுடியோவில் இருந்து வெளியேற்ற இடைக்கால தடை விதிக்க வேண்டும். ஆனால் இந்த விவகாரத்தில் எனக்கு இடைக்கால நிவாரணம் வழங்காமல், விசாரணை தொடர்ந்து ஒத்தி வைக்கப்படுகிறது.
எனவே இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உதவி மாநகர உரிமையியல் நீதிமன்றத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள சமரசத் தீர்வு மையத்தில் ஆஜராகி பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான முறையில் தீர்வு காண வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. சமரசத் தீர்வு மையத்தில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்த வழக்கு நீதிபதி பாரதிதாசன் முன் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த விவகாரம் தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை இரண்டு வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.