Tamilசெய்திகள்

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்காத பா.ஜ.க அரசு – சோனியா காந்தி குற்றச்சாட்டு

உத்தர பிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடத்தப்படுகிறது. ஏற்கனவே 3 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துவிட்டது. தேர்தல் நடைபெற உள்ள மற்ற தொகுதிகளில் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில், நாளை 4-ம் கட்ட பொதுத்தேர்தல் நடக்கிறது. இதற்காக காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி காணொலி வாயிலாக பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

உ.பி. மக்களிடையே கருத்து வேறுபாடுகளை உருவாக்குவதைத் தவிர வேறு எதையும் செய்யாத அரசை நீங்கள் பார்த்தீர்கள்.
இளைஞர்கள் படித்து வேலைக்கு தயாராக இருக்கின்றனர். ஆனால், பா.ஜ.க. அரசு அவர்களை வீட்டில் உட்கார வைத்துள்ளது. சுமார் 12 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆனால், இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படவில்லை.

பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை தாறுமாறாக உயர்ந்து வருவதால், மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

ஊரடங்கின் போது பல மைல் தூரம் நடந்த வலியை அனுபவித்தீர்கள். ஆனால் மோடி, யோகி அரசு பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டது. அரசு உங்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை என தெரிவித்தார்.