இளைஞரணி மாநாடு பாராளுமன்றத் தேர்தலுக்கான பயிற்சிக்களமாக இருக்க வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கையான சமூகநீதியை, இந்தியாவின் தவிர்க்க முடியாத அரசியல் கொள்கையாக மாற்றிக்காட்டியவர் வி.பி.சிங். அவருடைய இந்தச் சிறப்பான முடிவின் பின்னணியில் ஊக்கசக்தியாக விளங்கியவர் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர்.
சமூகநீதிக் காவலர் எனப் பெயர் பெற்ற வி.பி.சிங் ஆட்சியை, சமூக அநீதியை காலம் காலமாக ஆதரித்தும்-நிலைநாட்டியும் வரும் பா.ஜ.க. கவிழ்த்தது. ஓராண்டு கூட முழுமையாகப் பதவியில் இல்லாவிட்டாலும் இந்தியாவின் மிகச்சிறந்த பிரதமர்களின் வரிசையிலே நிலையான இடத்தைப் பிடித்திருப்பவர் வி.பி.சிங். அத்தகைய மாமனிதருக்கு இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாடு அரசின் சார்பில் உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது. அன்று இளைஞரணிச் செயலாளராகவும் இன்று கழகத் தலைவராகவும் தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் உள்ள உங்களில் ஒருவனான நான் அதனைத் திறந்து வைக்கின்ற நல்வாய்ப்பினைப் பெற்றுள்ளதால் தான், வாழ்வில் ஒரு பொன்னாள் என்று இந்நன்னாளைக் குறிப்பிட்டேன்.
ஏறத்தாழ 35 ஆண்டுகளுக்கு முன் சமூகநீதிக்காகவும், மாநில உரிமைக்காகவும் தேசிய முன்னணி தொடங்கப்பட்டபோது, கழகத்தின் இளைஞரணி எத்தகைய எழுச்சிமிக்க பேரணியை நடத்திக் காட்டியதோ, அதுபோல, சமூகநீதியை முற்றிலுமாக அழிக்கத் துடிக்கும் நீட் தேர்வுக்கு எதிராகவும், மாநில உரிமைகளைப் பறித்திடும் ஒன்றிய பா.ஜ.க. அரசிடமிருந்து இந்தியாவைக் காப்பாற்றுவதற்காகவும் மக்களின் ஆதரவை நாடிக் கையெழுத்து இயக்கத்தையும், இரு சக்கர வாகனப் பரப்புரைப் பேரணியையும் மிகச் சிறப்பாக நடத்தியுள்ளது இன்றைய இளைஞரணி.
முத்தாய்ப்பாக, டிசம்பர் 17-ம் நாள் சேலத்தில் ‘மாநில உரிமை மீட்பு முழக்க’த்துடன் இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற இருக்கிறது. இளைஞரணிச் செயலாளரும்-இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி இன்று தன் பிறந்தநாளில் என்னிடம் வாழ்த்துகளைப் பெற்றுள்ளார். அவரை மட்டும் நான் வாழ்த்தவில்லை. இரண்டாவது மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்திட வேண்டும் என அயராது பாடுபடும் இருபத்தைந்து லட்சம் இளைஞரணி உடன்பிறப்புகளையும் நான் வாழ்த்தி மகிழ்கிறேன்.
மாநாட்டை இளைஞரணி நடத்தினாலும் கழகத்தின் ஒவ்வொரு உடன்பிறப்புக்கும் இதில் பங்கேற்கும் உரிமையுண்டு. இந்த மாநாடு, இன்னும் சில மாதங்களில் நாம் எதிர்கொள்ள இருக்கும் பாராளுமன்றத் தேர்தலுக்கான பயிற்சிக்களம். கழகத்தினர் கூடுகின்ற பாசறைக்கூடம். அதனால்தான் நேற்று நடைபெற்ற மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தின் மையப்பொருளாக இளைஞரணி மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் குறித்தும், அதனை வெற்றிகரமாக நடத்தி முடிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
2007-ம் ஆண்டு உங்களில் ஒருவனான என் தலைமையில் இளைஞரணி செயல்பட்டபோது, அதன் வெள்ளி விழா ஆண்டையொட்டி முதல் மாநில மாநாடு நடைபெற்றது. இப்போது உதயநிதி அமைச்சராக இருப்பதுபோல அப்போது நான் அமைச்சர். இப்போது நான் முதலமைச்சராக இருப்பதுபோல அப்போது தலைவர் கலைஞர் முதலமைச்சர். இளைஞரணி மாநாட்டுப் பணிகளை நான் முன்னின்று அப்போது மேற்கொண்டபோது, அதன் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்து, நெறிப்படுத்தி வழிநடத்தியவர் தலைவர் கலைஞர்தான். அதே பொறுப்புணர்வுடன்தான் மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் என் ஆலோசனைகளை வழங்கி இருக்கிறேன்.
‘அனைவருக்கும் அனைத்தும்’ என்கிற திராவிட மாடல் ஆட்சியை நாம் நடத்தி வருகிறோம். கலைஞர் உரிமைத் திட்டம், விடியல் பயணத் திட்டம், புதுமைப் பெண் திட்டம் உள்ளிட்ட பெண்களின் நலன் காக்கும் திட்டங்கள் நேரடிப் பயன்களைத் தருவதால் தமிழ்நாட்டு பெண்களின் நம்பிக்கைக்குரிய இயக்கமாகத் திராவிட முன்னேற்றக்கழகம் மட்டுமே இருக்கிறது. அதுபோல இளைஞர்களுக்கான நான் முதல்வன் திட்டம், திறன் மேம்பாட்டுப் பயிற்சி, புதிய வேலைவாய்ப்புகள், மாவட்டந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள், விளையாட்டுப் பயிற்சிகளுக்கான ஊக்கம் இவற்றை திராவிட மாடல் அரசு நிறைவேற்றி வருகிறது.
பொய்களை விற்று அதில் கூலி பெற்று இளைஞர்களை ஏமாற்றும் கூட்டம் ஒரு புறம், வதந்திகளை பரப்பி-வன்முறையை விதைத்து தமிழ்நாட்டில் கால் ஊன்றி விடலாம் எனத் தப்புக்கணக்கு போடும் கூட்டம் மறுபுறம், தங்களை அடிமைகளாக விற்றுக்கொண்டு தமிழ்நாட்டின் உரிமைகளை அடமானம் வைத்து விட்டுப்போன முதுகெலும்பற்ற கூட்டம் இன்னொரு புறம்.
இந்த மோசடி அரசியல் சக்திகளை எதிர்கொண்டு, மக்கள் நலன் காக்கும் திராவிட மாடல் ஆட்சியை வழங்கி வரும் தி.மு.கழகமும் அதன் தோழமை சக்திகளும் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளையும் முழுமையாக வென்றாக வேண்டும். அப்போதுதான் இந்திய அளவில் நம் இந்தியா கூட்டணி வலுவான ஆட்சியை அமைக்கும். இளைஞரணி முன்னெடுத்துள்ள நீட் விலக்கு என்ற இலக்கினை வெற்றிகரமாக எட்ட முடியும். மாநில உரிமைகளை மீட்டெடுக்க முடியும்.
இவற்றை மனதில் கொண்டு, இளைஞரணி மாநாட்டை வெற்றிகரமாக நடத்திட மாவட்டக் கழகச் செயலாளர்கள் செயலாற்ற வேண்டும் என்பதை நேற்றைய கூட்டத்தில் எடுத்துரைத்தேன். தேர்தல் களத்திற்கான பயிற்சிக்களமாக அமைய இருக்கும் இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாட்டின் வெற்றி அதனைப் பறைசாற்ற வேண்டும்.
களத்தில் பாய்வதற்குத் தயாராக இருக்கும் கணைகளாக இளைஞரணியினர் செயலாற்றி வருகிறார்கள். அவர்களுக்குத் துணை நிற்கவும், இந்தியா திரும்பிப் பார்க்கும் வகையில் மகத்தான வெற்றி மாநாடாக அமையவும் மாநாட்டுத் தலைவர் உதயநிதி அழைக்கிறார்.
கழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும், அந்தந்த மாவட்டங்களுக்குட்பட்ட அனைத்துக் கிளைகளிலிருந்தும் தேர்தல் களத்திற்கான வீரர்களாக உடன்பிறப்புகள் திரளட்டும். கடல் இல்லாச் சேலம், கருப்பு-சிவப்புக் கடலினைக் காணட்டும்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதில் கூறியுள்ளார்.