இளம் வீரர்களுக்கு ஆதரவாக இருப்போம் – இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கருத்து
இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 190 ரன்கள் எடுத்தது. இதனால் இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இளம் வீரர்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்று கொள்வார்கள் எனவும் அவர்களுக்கு ஆதரவாக இருப்போம் எனவும் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.
இந்திய அணி தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியதாவது:-
எந்த வடிவத்திலும் யாரும் நோ-பால் வீச விரும்புவதில்லை. அது குறிப்பாக 20 ஓவர் போட்டிகளில் உங்களை காயப்படுத்தலாம். இந்த இளம் வீரர்களுடன் நாம் பொறுமையாக இருக்க வேண்டும். அவர்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்று கொள்வார்கள். இந்திய அணியில் நிறைய இளம் வீரர்கள் உள்ளனர். குறிப்பாக பந்து வீச்சில் இளம் வீரர்கள் உள்ளனர். அவர்கள் சில சமயங்களில் இது போன்ற விளையாட்டுகளை விளையாட வேண்டியதிருக்கும். அவர்கள் கடினமாக உழைக்கிறார்கள்.
நாங்கள் அவர்களுக்கு உதவ முயற்சிக்கிறோம். தொழில் நுட்ப ரீதியாக ஆதரவளிக்கிறோம். மேலும் அவர்களின் திறமையில் இருந்து சிறந்ததை பெறுவதற்கு சரியான சூழலை உருவாக்குகிறோம். சர்வதேச கிரிக்கெட்டில் கற்று கொள்வது எளிதானதல்ல. அதிலிருந்து கற்று கொள்ள வேண்டும். நல்ல விஷயம் என்னவென்றால் ஒருநாள் போட்டி உலக கோப்பை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப்பை மையமாக கொண்டு குறைந்தபட்சம் 20 ஓவர் போட்டியில் நிறைய இளம் வீரர்களை முயற்சித்து பார்க்க எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது என்றார்.