Tamilசினிமா

இலட்சக்கணக்கிலான அண்ணன் தம்பிகள் நெகிழ்கின்றோம் – இளையராஜா, கங்கை அமரன் சந்திப்பு குறித்து தங்கர் பச்சான் கருத்து

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் இளையராஜா. இவரின் இசைக்கு இன்றளவும் ரசிகர்கள் பட்டாளம் எதிர்ப்பார்ப்போடு காத்துக்கொண்டிருக்கிறது. இவரது தம்பி, இயக்குனர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவர் கங்கை அமரன். இவர்கள் இருவரின் கூட்டணிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே குவிந்திருக்கிறது. இளையராஜாவின் இசையில் பல பாடலுக்கு கங்கை அமரன் பாடல் வரிகள் எழுதியிருக்கிறார்.

கங்கை அமரன் இயக்கி இளையராஜா இசையில் உருவான எங்க ஊரு பாட்டுக்காரன், கரகாட்டக்காரன் போன்ற பல படங்கள் இன்றளவும் ரசிகர்கள் பேசும் படமாக இருக்கிறது. குறிப்பாக இவர்கள் கூட்டணியில் உருவான செந்தூரப்பூவே செந்தூரப்பூவே, பூவரசம் பூ பூத்தாச்சு, என் இனிய பொன் நிலாவே, காற்றில் எந்தன் கீதம் பாடல்கள் அனைவரையும் இன்றும் முணுமுணுக்க வைத்துக்கொண்டிருக்கிறது. இதனிடையே இளையராஜாவும், அவரது சகோதரர் கங்கை அமரன் இருவரும் இணைந்து ‘பெரியசாமி சின்னசாமி’ என்ற படத்தை தயாரித்தனர். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இருவரும் பேசிக்கொள்ளவில்லை என்றும், இருவரும் குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது இல்லை என்றும் கூறப்பட்டது.

பல வருடங்களுக்கு பிறகு கங்கை அமரன் அவருடைய சகோதரர் இளையராஜாவை நேரில் சந்தித்து பேசிய புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வந்தது. இந்நிலையில், இதனை பற்றி நெகிழ்ந்து இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான தங்கர் பச்சான் அவருடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அதில், ”ஒரே வயிற்றில் பிறந்து, ஒன்றாகவே வளர்ந்து, இன்ப துன்பங்களை அனுபவித்து, காலம் ஏற்படுத்திய பிரிவில் கடந்த காலங்களை எண்ணி எண்ணி ஏக்கங்களோடு தனிமையில் தத்தளித்து ஒன்று சேர்ந்தபின் அங்கே சொற்களுக்கு இடமேது. இதனைக்கண்டு, என்னைப்போன்ற இலட்சக்கணக்கிலான அண்ணன் தம்பிகளும் நெகிழ்கின்றோம்” என்று வாழ்த்திப் பதிவிட்டுள்ளார்.