இலங்கை தலைநகர் கொழும்புவில் நேற்று 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் 4 ஓட்டல்கள் குடியிருப்பு வளாகம் என 8 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 290 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 500 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த கோர தாக்குதல்களில் அமெரிக்கா, டென்மார்க், சீனா, பாகிஸ்தான், மொராக்கோ, இந்தியா, வங்காளதேசம் ஆகிய வெளிநாடுகளை சேர்ந்த 35 பேர் உயிரிழந்ததாக இலங்கை ஊடகங்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளன.
இதில் லட்சுமி, நாராயண் சந்திரசேகர், ரமேஷ் ஆகிய 3 இந்தியர்கள் உயிரிழந்ததாக இலங்கையில் உள்ள நேஷனல் மருத்துவமனை தெரிவித்தது. இதனை மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். தற்போது 5 இந்தியர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் நேற்று நடத்தப்பட்ட தாக்குதல்கள் தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில், மேலும் அசம்பாவிதங்கள் நிகழ்வதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.