இலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி – ராமேஸ்வரம் கோவிலில் பாதுகாப்பு அதிகரிப்பு

இலங்கையில் தேவாலயங்களை குறி வைத்து நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 200-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய தீவிரவாத அமைப்பு குறித்து இலங்கை அரசு விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது. மேலும் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து இலங்கை முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலியாக தமிழக கடற்கரை பகுதியில் இந்திய கடற்படை பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளது.

குறிப்பாக இலங்கையில் இருந்து 20 கடல் மைல் தொலைவில் உள்ள ராமேசுவரம், தனுஷ்கோடி ஆகிய பகுதிகளில் இந்திய கடற்படை, கடலோர காவல்படையினர் 24 மணி நேர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கையில் இருந்து பயங்கரவாதிகள் பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவாமல் தடுப்பதற்காக இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமாக ஹோவர் கிராப்ட், கப்பல் மற்றும் சிட்டா ஹெலிகாப்டரிலும் வீரர்கள் ரோந்து சுற்றி வருகின்றனர்.

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்களின் உடமைகள் தீவிர சோதனை செய்யப்படுகிறது.

மேலும் கோவிலுக்குள்ளும் அவ்வப்போது மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ராமேசுவரம் ரெயில் நிலையம், பஸ் நிலையம் பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர்.

FacebookTwitterWhatsAppCopy LinkShare
AddThis Website Tools
Tags: south news