இலங்கை கிரிக்கெட் அணியை கலாய்த்த வங்காளதேசம் – வைரலாகும் வீடியோ
இலங்கை கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நடைபெற்றது. இதில் முதல் இரு ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்று தொடர் 1-1 என சமனில் உள்ளது.
இந்நிலையில் ஒருநாள் தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதலில் ஆடிய இலங்கை அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 235 ரன்கள் சேர்த்தது. வங்காளதேச அணி தரப்பில் தஸ்கின் அகமது 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து வங்காளதேசம் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான அனாமுல் ஹக் -தன்சித் ஹசன் ஜோடி 50 ரன்களை எடுத்து சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது. அனாமுல் 12 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் நஜ்முல் 1, டவ்ஹித் ஹ்ரிடோய் 22, மஹ்முதுல்லாஹ் 1 என விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
ஒருமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தன்சித் ஹசன் 84 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த முஷ்பிகுர் ரஹீம்- ரிஷாத் ஹொசைன் ஜோடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது. இதனால் வங்காளதேசம் 40.2 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 237 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை வங்காளதேசம் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில் டி20 தொடரை இலங்கை அணி கைப்பற்றிய பிறகு கோப்பையுடன் டைம் அவுட் Celebration கொடுத்தனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வங்காளதேசம் அணி ஹெல்மெட் Celebration கொடுத்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.