Tamilவிளையாட்டு

இலங்கை, இந்தியா இடையிலான 3வது டி20 போட்டி நாளை புனேவில் தொடங்குகிறது

மலிங்கா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.

இரு அணிகள் இடையே கவுகாத்தியில் நடைபெற இருந்த முதல் ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இந்தூரில் நடந்த 2-வது போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது.

இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் ஆட்டம் மராட்டிய மாநிலம் புனேயில் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நாளைய ஆட்டத்திலும் வென்று தொடரை கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது.

வங்காளதேசம் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான 20 ஓவர் தொடரை இந்திய அணி சமீபத்தில் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக கைப்பற்றி இருந்தது. தற்போது இலங்கையை வீழ்த்தி ‘ஹாட்ரிக்‘ தொடரை வெல்லுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆட்டத்தில் பந்து வீச்சு மிகவும் நேர்த்தியாக இருந்தது. ‌ஷர்துல் தாகூர், நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ் ஆகியோர் அபாரமாக பந்துவீசி வெற்றியைத் தேடித் தந்தனர்.

‌ஷர்துல் தாகூர் இந்தூரில் அடுத்தடுத்து 2 விக்கெட் கைப்பற்றினார். அதற்குள் ஓவர் முடிந்ததால் ஹாட்ரிக் வாய்ப்பு பறிபோனது.

காயத்தில் இருந்து திரும்பிய ஜஸ்பிரித் பும்ராவும் நல்ல நிலையில் உள்ளார். அவர் இன்னும் ஒரு விக்கெட் கைப்பற்றினால் 20 ஓவரில் அதிக விக்கெட்டை எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை பெறுவார்.

பேட்டிங்கில் கேப்டன் விராட்கோலி, லோகேஷ் ராகுல், ஷிரேயாஸ் அய்யர், தவான் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

நாளைய ஆட்டத்திற்கான அணியில் மாற்றம் இருப்பதற்கான வாய்ப்பு குறைவே. யசுவேந்திர சாஹலுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டால் குல்தீப் யாதவ் நீக்கப்படலாம்.

பேட்டிங்கிலும், பந்து வீச்சிலும் சமநிலையை பயன்படுத்தினால்தான் இலங்கையை மீண்டும் வீழ்த்த முடியும்.

முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்யும் வேட்கையில் இலங்கை இருக்கிறது. இந்த ஆட்டத்திலும் தோற்றால் தொடரை இழந்து விடும் என்பதால் அந்த அணிக்கு வெற்றி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது.

இலங்கை அணியின் பேட்டிங் மோசமாக உள்ளது. குஷால் பெரைராவை தவிர யாரும் சிறப்பாக ஆடவில்லை. இதனால் நாளைய ஆட்டத்தில் இதை சரி செய்ய வேண்டிய நெருக்கடி அந்த அணி வீரர்களுக்கு உள்ளது. முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இசுரு உதனா நாளைய போட்டியில் ஆடமாட்டார்.

இரு அணிகளும் 20 ஓவர் போட்டியில் 18 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 12-ல், இலங்கை 5-ல் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவு இல்லை.

நாளைய ஆட்டம் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷனில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *