X

இலங்கை அதிபர் தேர்தல்! – சஜித் பிரேமதாசா முன்னிலை

இலங்கையில் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. மாலை 5 மணியுடன் நிறைவடைந்த இந்த தேர்தலில் சுமார் 80 சதவீதம் வாக்குகள் பதிவானது.

அங்கு பதிவான வாக்குகளை எண்ணும் பணி பலத்த பாதுகாப்புடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று நள்ளிரவு முதல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இதில், பொது ஜன பெரமுனா கட்சியின் சார்பில் போட்டியிட்ட கோத்தபய ராஜபக்சே மற்றும் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாசாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்து இரு கட்சி வேட்பாளர்களும் மாறி மாறி முன்னிலையில் இருந்து வருகின்றனர்.

இன்று அதிகாலை நிலவரப்படி கோத்தபய ராஜபக்சே முன்னிலையில் இருந்து வந்தார். ஆனால், காலை 7 மணி நிலவரப்படி, ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசா கோத்தபய ராஜபக்சேவை விட கூடுதலாக ஒரு லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை பெற்றார்.

இந்நிலையில், காலை 9 மணி நிலவரப்படி பொதுஜன பெரமுனா கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே மீண்டும் முன்னிலை பெற்றுள்ளார். அவர் சஜித் பிரேமதாசாவை விட கூடுதலாக 90 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். இதனால் இலங்கையின் அடுத்த அதிபர் யார் என்பதில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.