Tamilசெய்திகள்

இலங்கை அதிபர் தேர்தல் – எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பெயர் பரிந்துரை

இலங்கையில் மக்கள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், அதிபர் மாளிகை மற்றும் பிரதமர் இல்லத்தை போராட்டக்காரர்கள் கைப்பற்றினர். பிரதமர் பதவியில் இருந்து ரணில் விலகிய நிலையில், தப்பி ஓடி தலைமறைவாகி உள்ள கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியில் இருந்து 13ந் தேதி விலகுவதாக அறிவித்தார்.

இதையடுத்து புதிய அதிபர் தேர்வு தொடர்பாக இலங்கை பாராளுமன்றம் ஜூலை 15ஆம் தேதி மீண்டும் கூடுவதாகவும், புதிய அதிபர் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஜூலை 19ஆம் தேதி பெறப்படும் என்றும், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார். ஜூலை 20ஆம் தேதி புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இலங்கையின் அதிபர் பதவிக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதை முக்கிய எதிர்கட்சியான சமகி ஜன பலவேகயாவின் தலைவர் சரத் பொன்சேகா உறுதிப்படுத்தி உள்ளார். நேற்று நடைபெற்ற அக்கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் சமகி ஜன பலவேகயா கட்சிக்கு 50 உறுப்பினர்கள் உள்ளனர். அதிபர் தேர்வு தொடர்பான பாராளுமன்ற வாக்கெடுப்பில் வெற்றி பெற சஜித் பிரேமதாசவுக்கு 113 எம்.பி.க்கள் ஆதரவு தேவை. இதனிடையே, தாய்நாட்டை பொருளாதாரத்தை மீண்டும் மீட்டெடுக்கப்பட வேண்டும் என்றும், இதற்கு எதிர்க்கட்சிகள் தயாராக இருப்பதாகவும் சஜித் பிரேமதாச விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தை மீட்பது, வேலை வாய்ப்பு திட்டத்தை செயல்படுத்துவது உள்ளிட்டவற்றை தவிர மாற்றுத் தீர்வு எதுவும் இல்லை என்றம் அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய அதிபரின் கீழ் அனைத்துக் கட்சி ஆட்சி அமைக்கவும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.