இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மாலத்தீவுக்கு தப்பி ஓட்டம்
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்திய அவர்கள், கடந்த 3 நாட்களுக்கு முன் இலங்கை அதிபர் மாளிகைக்குள் நுழைந்து அதை ஆக்ரமித்தனர். போராட்டக்காரர்கள் அங்கிருந்த பொருட்களை எடுத்து சென்றனர். சில போராட்டக்காரர்கள் அதிபர் வீட்டிலேயே தங்கி உள்ளனர்.
போராட்டக்காரர்கள் வருவதற்குள் கோத்தபயா தனது குடும்பத்துடன் தப்பி கடற்படை முகாமில் தஞ்சம் அடைந்ததாக கூறப்பட்டது. இலங்கை அதிபர் பதவியை கோத்தபயா ராஜபக்சே 13ந்தேதி ராஜினாமா செய்வார் என அந்நாட்டு பாராளுமன்ற சபாநாயகர் மகிந்த யாப்பா தெரிவித்திருந்தார்.
அதிபர் கோத்தபயா இலங்கையில் இருந்து வெளியேறியதாக நேற்று முதலில் தகவல் வெளியானது. பின்னர் அது உண்மையில்லை என்றும் கோத்தபய ராஜபக்சே இலங்கையில்தான் இருக்கிறார் என்றும் சபாநாயகர் மகிந்த யாப்பா தெரிவித்தார்.
இதற்கிடையில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவி விலகல் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளார் என்றும், இன்று அது முறைப்படி அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் தனது மனைவி மற்றும் இரண்டு பாதுகாவலர்களுடன் கோத்தபய ராஜபக்சே இலங்கை விமானப்படை விமானத்தில் மாலைதீவு தலைநகர் மாலே நகருக்கு புறப்பட்டுச் சென்றதாக இலங்கை குடியுரிமை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இன்று அதிகாலையில் அவர் மாலே நகரை அடைந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.