Tamilசெய்திகள்

இலங்கையில் உள்ளாட்சி தேர்தல் தள்ளி வைப்பு

இலங்கை நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டால் மக்கள் அவதியடைந்து உள்ளனர். இந்தியா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து கடன் உதவி பெற்று இலங்கை அரசு நாட்டின் பொருளாதார நெருக்கடியை சமாளித்து வருகிறது.

இதற்கிடையே இலங்கையில் வருகிற மார்ச் 9-ந்தேதி உள்ளாட்சி தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டது. இந்த நிலையில் நிதி பற்றாக்குறை காரணமாக இலங்கையில் உள்ளாட்சி தேர்தல் தள்ளி வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வாக்கு சீட்டு அச்சடிக்கவும், வாகனங்களுக்கு எரிபொருள் மற்றும் வாக்குசாவடிகளுக்கு போலீஸ் பாதுகாப்புக்கு நிதி வழங்க கருவூலம் மறுத்து விட்டது. போதுமான பணம் இல்லாததால் தேர்தலுக்கு நிதி ஒதுக்க முடியாத சூழல் நிலவுகிறது.

இதுகுறித்து தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் நிமல் கூறும்போது, உள்ளாட்சி தேர்தல் குறித்த நேரத்தில் நடத்தப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டில் உறுதியளித்திருந்தேன். ஆனால் தேவையான நிதியை அரசாங்கம் விடுவிக்காததால் தேர்தலை எங்களால் நடத்த முடியாது என்று தற்போது கோர்ட்டில் தெரிவித்து உள்ளேன் என்றார். இதனால் இலங்கை உள்ளாட்சி தேர்தல் தள்ளி வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நாளை தீர்ப்பு வழங்க உள்ளது. இந்த தேர்தலுக்கு சுமார் ரூ.228 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. சம்பளம் ஓய்வூதியம் மற்றும் அத்தியாசிய சேவைகளை வழங்குவதற்கு அரசு வருமானம் போதுமானதாக இல்லாததால் தேர்தல் சாத்தியமற்றது என்று அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.