பிரதமர் நரேந்திர மோடி இலங்கை சென்றிருந்தார்.. இலங்கையில் கடந்த ஏப்ரல் 21-ந்தேதி நடைபெற்ற ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் இலங்கைக்கு சென்ற முதல் வெளிநாட்டு தலைவர் நரேந்திர மோடி தான்.
இலங்கையில் அவர் அதிபர் சிறிசேனா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோரை சந்தித்து பேசினார். இலங்கை மீண்டும் எழுச்சி பெறும், பயங்கரவாத நடவடிக்கைகள் மூலம் இலங்கையின் துணிவை தோற்கடித்துவிட முடியாது என்றும் பிரதமர் மோடி கூறினார்.
இந்நிலையில் பிரதமர் மோடியுன் நடந்த சந்திப்பு குறித்து இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியிருப்பதாவது:-
தாமதமாக நடைபெற்றுவந்த இந்தியா-இலங்கை இணைந்து செயல்படுத்திவரும் திட்டங்களை விரைவாக முடிப்பதாக பிரதமர் மோடிக்கு உறுதி கொடுத்துள்ளேன். இந்தியா, இலங்கை இணைந்து மேலும் பல கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதன் மூலம் இருநாடுகள் இடையேயான பொருளாதார ஒத்துழைப்பு உறுதி செய்யப்படும்.
இலங்கைக்கு மோடி தொடர்ந்து ஆதரவு அளித்துவருவது இலங்கையின் நம்பிக்கையை வலுப்படுத்துவதாகவும், இன்னும் அதிக மக்கள் இலங்கைக்கு சுற்றுலா வருவதற்கு ஊக்கமளிப்பதாகவும் இருக்கும்.
இந்தியா, இலங்கை, மாலத்தீவு ஆகிய 3 நாடுகள் இடையேயான பேச்சுவார்த்தை மூலம் இந்த பிராந்தியத்தில் பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்தும் நாங்கள் பேசினோம்.
இலங்கையின் பாதுகாப்பு படைகளுக்கு தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை எடுப்பதற்கான பயிற்சியை இந்தியா அளிக்க வேண்டும். அதற்கு தேவையான உதவிகளையும் இந்தியா வழங்க வேண்டும் என்றும் பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன்.
மோடியின் இலங்கை பயணம் மூலம் இலங்கைக்கு பயண கட்டுப்பாடுகளை விதித்த இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா உள்ளிட்ட நாடுகள் அந்த கட்டுப்பாடுகளை விலக்கிக்கொள்ளும் என்றும், அதன்மூலம் சுற்றுலா தொழில் மீண்டும் வளர்ச்சி அடையும் என்றும் கருதுகிறேன்.
இவ்வாறு ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்.
இலங்கையில் ஈஸ்டர் நாளில் குண்டுவெடிப்பு நடைபெற்றதை தொடர்ந்து பல நாடுகள் தங்கள் மக்கள் இலங்கைக்கு பயணம் செய்ய கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் இலங்கைக்கு சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது குறிப்பிடத்தக்கது.