தென் ஆப்பிரிக்கா அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் போட்டி தொடரில் இலங்கை 2-1 என வென்று தொடரைக் கைப்பற்றியது.
இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் 2 போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா வென்று முன்னிலை பெற்றிருந்தது.
இந்நிலையில் இலங்கை, தென் ஆப்பிரிக்கா இடையிலான 3வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக குசால் பெராரா 39 ரன்கள் எடுத்தார்.
தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபடா, பார்ச்சுன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஹென்ரிக்ஸ், டி காக் பொறுப்புடன் ஆடினர். இருவரும் அரை சதமடித்து அசத்தினர்.
இறுதியில், தென் ஆப்பிரிக்கா 14.4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 121 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. டி காக் 59 ரன்னுடனும், ஹென்ரிக்ஸ் 56 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி 3-0 என தொடரை முழுமையாக கைப்பற்றியது.