இலங்கைக்கு எதிரான 2 வது டி20 போட்டி – ஆஸ்திரேலியா வெற்றி
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி 20 போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி சிட்னியில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 164 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகமாக ஜோஷ் இங்லிஸ் 48 ரன்கள் எடுத்தார்.
இலங்கை சார்பில் சமீரா, ஹசரங்கா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் நிசாங்கா பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 73 ரன்னில் அவுட்டானார். சனகா 34 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில், இலங்கை அணி 20 ஓவரில் 164 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது.
இதையடுத்து, ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது. முதலில் ஆடிய இலங்கை ஒரு ஓவரில் 1 விக்கெட்டுக்கு 5 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 9 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் டி20 தொடரில் 2-0 என ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது.