Tamilவிளையாட்டு

இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி – அயர்லாந்து அணி முதல் இன்னிங்சில் 492 ரன்களுக்கு ஆல் அவுட்

அயர்லாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் இலங்கை அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

இதற்கிடையே, இலங்கை-அயர்லாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற அயர்லாந்து பேட்டிங் தேர்வு செய்தது. முதல் நாள் முடிவில் அயர்லாந்து 4 விக்கெட்டுக்கு 319 ரன்கள் எடுத்தது. கேப்டன் பால்பிரின் 95 ரன்னில் அவுட்டானார். லார்கன் டக்கெர் 78 ரன்னுடனும், கர்டிஸ் கேம்பெர் 27 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்நிலையில், 2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய டக்கெர் 80 ரன்னில் போல்டு ஆனார். காயம் காரணமாக முந்தைய நாளில் பாதியில் வெளியேறிய பால் ஸ்டிர்லிங் மீண்டும் களமிறங்கினார். முதலாவது சதம் அடித்த பார் ஸ்டிர்லிங் 103 ரன்னில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவருடன் இணைந்த கர்டிஸ் கேம்பெர் முதல் சதம் அடித்த நிலையில் 111 ரன்னில் வெளியேறினார். இறுதியில், அயர்லாந்து அணி முதல் இன்னிங்சில் 145.3 ஓவரில் 492 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.

டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து 400 ரன்களுக்கு மேல் எடுப்பது இதுவே முதல்முறையாகும். அத்துடன் இன்னிங்சில் இரு அயர்லாந்து வீரர்கள் சதம் காண்பதும் இதுவே முதல் நிகழ்வாகும். இலங்கை சார்பில் சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட்டும், விஷ்வா பெர்னாண்டோ, அசிதா பெர்னாண்டோ தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.