இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி – முதல் நாளில் வங்காளதேசம் 5/277

இலங்கை, வங்காளதேச அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்புரில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்தது வங்காளதேசம்.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் மக்முதுல் ஹசன் ஜாய், தமிம் இக்பால் ஆகியோர் டக் அவுட்டாகினர். கேப்டன் மொமினுல் ஹக் 9 ரன்னிலும், நஜ்முல் ஹூசைன் 8 ரன்னிலும், ஷகிப் அல்-ஹசன் ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். அந்த அணி 24 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

6-வது விக்கெட்டுக்கு விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸ், முஷ்பிகுர் ரஹிமுடன் கைகோர்த்தார். இருவரும் நிலைத்து நின்று ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் சதமடித்து அசத்தினர்.

முதல் நாள் முடிவில் வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்துள்ளது. முஷ்பிகுர் ரஹிம் 115 ரன்னுடனும், லிட்டன் தாஸ் 135 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

இலங்கை அணி சார்பில் கசுன் ரஜிதா 3 விக்கெட்டும், அசிதா பெர்னாண்டோ 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

நேற்றைய போட்டியில் 23-வது ஓவரில் பீல்டிங் செய்துகொண்டிருந்த இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் குசால் மென்டிஸ் நெஞ்சு வலிப்பதாக கூறினார். அணியின் உதவியாளர்கள் உதவியுடன் வெளியேறிய அவர், டாக்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் இதயத்தில் பிரச்சினை எதுவும் இல்லை, தசைப்பிடிப்பு தான் வலிக்கு காரணம் என தெரிய வந்ததால் இலங்கை அணி நிர்வாகம் நிம்மதி அடைந்துள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools