X

இலங்கைக்கு எதிரான 2வது டி20 – வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது

வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி, 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. முதலில் நடந்த ஒருநாள் தொடரை இலங்கை அணி 3-0 என கைப்பற்றி அசத்தியது.

இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகித்தது.

இந்நிலையில், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2வது டி 20 போட்டி பல்லேகலேவில் நேற்றுநடைபெற்றது.

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இலங்கை அணி முதலில் களமிறங்கியது.

அந்த அணியின் டாசன் ஷனகா 31 ரன்னும், ஏஞ்சலோ மேத்யூஸ் 23 ரன்னும், திசாரா பெராரா 21 ரன்னும் எடுத்தனர். எக்ஸ்டிரா வகையில் 21 ரன் கிடைத்தது.

இறுதியில் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 155 ரன்கள் எடுத்தது.

156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிராண்டன் கிங் 21 பந்தில் 43 ரன்கள் குவித்தார்.

அடுத்து இறங்கிய ஹெட்மையர் இறுதிவரை நிலைத்து நின்றார். நான்காவது விக்கெட்டுக்கு இறங்கிய ரசல் அதிரடியாக ஆடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அவர் 14 பந்தில் 6 சிக்சருடன் 40 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 17 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 158 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. இதன்மூலம் டி 20 தொடரை 2-0 என கைப்பற்றி அசத்தியது.

Tags: sports news